நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக ஜனக ரத்நாயக்க சட்டநடவடிக்கை

- சட்டத்தை மீறி நியமனம் வழங்குவதாக குற்றச்சாட்டு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு குஷான் ஜயசூரியவை நியமித்ததில், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சட்டத்தை மீறியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரையும், பாராளுமன்றத்தின் சட்டவாக்கத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 5 (2) எ இன் படி, மின்சாரத்துறையுடன் தொடர்புடைய ஒருவரை நியமிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், மின்சார துறையுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் தொடர்புடைய குஷான் ஜயசூரிய சத்தியக் கடதாசி மூலம் குறித்த பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

2023 பெப்ரவரி 14 ஆம் திகதியன்று, மின்சாரத் துறையுடன் தொடர்புடைய ஒருவரை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க முடியாது என கடிதம் மூலம் ஜனக ரத்நாயக்க நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார். பின்னர், நியமனக் கடிதத்தை திரும்பப் பெறுவதற்கு நிதி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், அவ்வாறு நியமனக் கடிதத்தை மீளப்பெறுவதற்கு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தை மீறும் இவ்வாறான சட்ட விரோதச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்கும் வகையில், சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

PDF File: 

Add new comment

Or log in with...