கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி, வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற 'பூரு மூணா' எனப்படும் ரவிந்து சங்கட சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு படுகொலைகள் உள்ளிட்டட பல்வேறு திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 'பூரு மூணா' எனப்படும் குறித்த சந்தேகநபர் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ள்ளனர்.
அவிசாவளை மேல் நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் கார் ஒன்றிற்குள் இருந்த நிலையில் இன்று பிற்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாண தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி, சந்தேகநபர் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் காவலில் வைத்திருந்த வேளையில், தேரர்கள் எனத் தெரிவிக்கப்படும் இருவரின் உதவியுடன் சந்தேக நபர் தப்பிச் சென்றிருந்தார்.
பல்வேறு கொலைகளின்போது துப்பாக்கிதாரியாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதான குறித்த சந்தேகநபருக்கு தங்குமிட வசதி வழங்கியமைக்காக ஹொரண மில்லனிய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment