யாழ்ப்பாணத்தில் உணவகம் நடத்தும் ஆசிரியரின் நல்லெண்ண சிந்தனை!
தற்காலத்தில் உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற வகையில் பிரமாண்டமான முறைகளில் அமைக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து சற்று வேறுபட்டு உள்நாட்டு மக்களுக்காக, அவர்களுடைய நலனைப் பேணும் வகையில் இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி யாழ் மாவட்டத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகமானது காங்கேசன் துறை வீதி, தெல்லிப்பழை சந்திக்கு அருகாமையில் 'நாயகி' எனும் பெயருடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் ஒரு ஆசிரியர். இங்குள்ள அனைத்துப் பொருட்களுமே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உணவகம் ஆரம்பமாகி இரண்டு ஆண்டுகளாகியும் மக்கள் மத்தியில் இன்றுவரை வரவேற்பை பெற்று வருகின்றமை சிறப்பானது.
ஆசிரியராக இருந்தாலும் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தர்ஷன் என்னும் ஆசிரியர். அவரைச் சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.
கேள்வி: ஆசிரியராக இருந்துகொண்டு பகுதிநேரமாக வேலை செய்வது தொடர்பிலான உங்கள் கருத்து என்ன?
பதில்: ஆசிரியர் தொழிலானது நான் படித்த படிப்பிற்குக் கிடைத்த தொழில். இது என்னுடைய முயற்சியால் கிடைத்த தொழில். இதுதான் வித்தியாசம். காலை 7.30 மணி தொடக்கம் 1.30 மணிவரை ஆசிரியராக அதற்குரிய கடமைகளைச் செய்கின்றேன். பிற்பகல் இரண்டரை மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரை இந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றேன்.
கேள்வி: இத்தொழிலை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?
பதில்: எங்களுடைய மக்களுக்காக ஆகும். நாம் அடைக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அவற்றிலிருந்து விடுபட்டு இயற்கையான உணவுகளை அருந்தவேண்டும் என்ற கொள்கை அடிப்படையில்தான் இத்தொழிலை மேற்கொள்கின்றேன்.
கேள்வி: யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய கடைகளுடன் ஒப்பிடுகையில் இக்கடையினது சிறப்புகள் எவை?
பதில்: ஏனைய உணவகங்களுடன் ஒப்பிடுகையில் இயற்கையோடு இணைந்த சூழலாகக் காணப்படுகிறது. இயற்கையான உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்கள் (கறுவா, கராம்பு, ஏலக்காய்) அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். அத்துடன் ஏனைய கடைகளில் விற்கப்படுகின்ற உணவுகளின் விலையில் அரைவாசிதான் வாங்குகின்றோம். இங்கு சிற்றுண்டிகள் விற்கப்படுகின்றன. வாழைக்காய் பஜ்ஜி, ஈரப்பலா பஜ்ஜி விசேடமானதாகக் காணப்படுகின்றன. அத்துடன் அப்பம், பூரி, மசாலா தோசை, வடை, றோல், பற்றிஸ் போன்றவற்றினையும் பானவகைகளையும் இங்கே விற்பனை செய்யகிறோம்..
கேள்வி: இங்கு தொழில் புரிபவர்கள் யார்?
பதில்: மாணவர்கள், அங்கவீனமானவர்கள்தான் இங்கு பணிபுரிகிறார்கள். யாழ் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக போதைப்பொருள் பாவனை காணப்படுகிறது. அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடாது கல்வி, தொழில், வீடு என்ற சிந்தனைகளில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களை தொழிலில் அமர்த்தியுள்ளேன். தமது படிப்பு முடிந்ததும் நேரம் உள்ள வேளைகளில் இங்கு தொழில்புரிந்து தமது குடும்பத்தையும் பார்த்துக் கொள்வார்கள். இங்கு ஆறு பேர் வேலை செய்கிறார்கள்.
கேள்வி: தொழிலாளர்களை எவ்வாறு தெரிவு செய்கிறீர்கள்?
பதில்: இங்கு வேலைவாய்ப்பினை தாமாகவே தேடி வருவார்கள். அவர்களுடைய பின்புலத்தினை குறிப்பாக குடும்ப சூழலை அறிந்துதான் தொழில்வாய்ப்பினை கொடுக்கின்றேன். தெல்லிப்பழை வைத்தியசாலை, குடில் போன்றவர்களும் எமக்கு ஆதரவினை வழங்குகின்றார்கள். இங்கு வருகின்ற உளரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை நான் அக்கறையுடன் அணுகுகின்றேன். அவர்களுடன் கதைத்து அவர்களை சாதாரணமானவர்களாக ஆற்றுப்படுத்தல் செய்து தருவதாக வாக்குறுதி அளித்து தொழில்வாய்ப்பினை வழங்குகின்றேன். தமது சுயதேவையினை பூர்த்தி செய்ய முடியாதவர்கள் தான் இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொழில்வாய்ப்பினை கொடுத்துள்ளேன். அவர்களுடைய வேலைக்கு ஏற்ப சம்பளத்தினைக் கொடுக்கிறேன். வேலை முடிந்து வீடு செல்கின்றபோது சம்பளப் பணத்தினைக் கொண்டுதான் செல்வார்கள்.
கேள்வி: இந்தத் தொழிலை தெரிவு செய்தது நீண்டகால ஆசையா, குறுங்கால ஆசையா?
பதில்: சிறுவயது முதலிலே இத்தொழிலை மேற்கொள்ள வேண்டும் என சிறு ஆர்வம் இருந்தது. நான் பட்டப்படிப்பினை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்றிருந்தேன். அங்கு இருந்த வேளைகளிலே முற்றுமுழுதாக விரைவுணவுகளைத்தான் உண்ணவேண்டிய நிலை இருந்தது. பின்னர் இரத்தினபுரியில் ஆறு வருடங்களாக ஆசிரியராக பணிபுரிந்தேன். அங்கு இருந்த வேளைகளில் கூட கடை உணவுகளைத்தான் உண்ண வேண்டிய நிர்ப்பந்தச் சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் இந்த எண்ணம் எனக்குள் தோன்றியது. இயற்கையான முறைகளில் எந்தவிதமான கலப்படமும் இன்றி உணவுகளை உண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதனால்தான் இத்தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில் இக்கடையைப் பார்த்ததும் பெரிய உணவுக்கடை என்று பெருமளவிலானோர் வருவதில்லை. கடையினை நடத்தலாமா என்னும் சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனபோதிலும் நான் தளரவில்லை. பின்னர் இக்கடை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பதிவாகியதன் விளைவாக அதிகளவிலான மக்கள் வருகிறார்கள். அதிகளவிலான மக்கள் வருகிறார்கள் என்பதற்காக விலையைக் கூட்டவும் இல்லை. தரமற்ற உணவுகளைக் கொடுக்கவுமில்லை. ஆரம்பத்தில் எவ்வாறு உணவுகளைத் தயாரித்தேனோ அவ்வாறே தயாரித்து வருகிறேன். இனியும் தயாரிப்போம்.
கேள்வி: ஆசிரியர் மற்றும் வியாபாரி என்ற வகையில் நேரமுகாமைத்துவம் எப்படி காணப்படுகிறது? சவால்கள் உள்ளனவா?
பதில்: நேர முகாமைத்துவம் என்கின்றபோது இரண்டு தொழிலையும் செய்கின்ற நேரம் வேறு வேறு ஆகும். இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து சந்தைக்குச் சென்று தேவையானவற்றை வாங்கிவிட்டு 5.30 மணிக்கு வீடு வந்துவிடுவேன். பின்னர் ஆசிரியராக எனது தொழிலைச் செய்வேன். பின்னர் வந்துதான் மிகுதி வேலை. எனக்கான பொருட்களை வாடிக்கையாக பெற்றுக் கொள்கிறேன். சவால் என்கின்றபோது நித்திரையைக் குறைத்துள்ளேன். ஐந்து மணித்தியாலங்களுக்கும் குறைவான நித்திரைதான் செய்ய முடிகிறது.
கேள்வி: தற்கால பொருளாதார நெருக்கடியான சூழலில் குறைந்த விலையில் பொருட்களை விற்பது தொடர்பிலான உங்கள் கருத்து?
பதில்: குறைவாக விற்பதனால் எனக்கு நஷ்டம் ஏற்படவில்லை. பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகின்ற எந்தவொரு மனிதனும் மிகக் குறைந்த விலைகளில் இங்கு சாப்பிட முடியும். நான் பணத்தினை எதிர்பார்க்கவில்லை. பணம் இல்லாமல் சாப்பிட கேட்டாலும் கொடுத்து விடுவதற்கு நான் தயார். ஆனால் சும்மா கொடுத்தால் வெட்கத்தில் வாங்க மாட்டார்கள். அதனால்தான் மலிவாக விற்கிறேன். தம்மால் முடிந்த பணத்தினை கொடுத்துவிட்டு சாப்பிட்டு போக முடியும். ஒரு ரூபா இலாபம் வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். எனது கடை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை பத்து ரூபாய்தான். இது எப்போதுமே மாற்றமடையாது.
கேள்வி: ஆசிரியராக இருந்துகொண்டு இத்தொழில் செய்வது தொடர்பிலான சமூகத்தின் பார்வை எவ்வாறு இருக்கிறது?
பதில்: தற்கால சூழலைப் பொறுத்தவரையில் அரசாங்க வேலையினை மாத்திரம் நம்பி எம்மால் வாழ முடியாது. வேறு வேலையினைச் செய்ய வேண்டிய தேவையுள்ளது. அவ்வாறு வாழ்ந்தால் தான் குடும்பத்தையே நடத்த முடியும். இதனை பெருமளவிலானோர் மறைமுகமாகச் செய்கின்றார்கள். நான் வெளிப்படையாகச் செய்கின்றேன்.
கேள்வி: இக்கடை தொடர்பிலான உங்களுடைய அடுத்த கட்டச் செயற்பாடு?
பதில்: இன்னொரு கடையினை ஆரம்பிக்கவேண்டும் என்கின்ற எண்ணம் எல்லாம் இல்லை. இருக்கின்ற கடையை மேலும் மெருகூட்ட வேண்டும். இயற்கையான உணவுகளை மேலும் அறிமுகப்படுத்தி குறிப்பாக காளான், இலைக்கஞ்சி போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். எம் சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
கிசோபனா சுந்தரலிங்கம்...
ஊடகக் கற்கைகள் துறை
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
Add new comment