நலிவுற்ற பெண்களை இனங்கண்டு சமூகத்தில் இணைப்பதே எமது நோக்கம்

கேள்வி; சுய உதவிக் குழுவை ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

பதில்; நலிவுற்ற பெண்களை உள்வாங்கி அவர்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற பிரதான நோக்கத்தின் பேரிலேயே சுய உதவிக் குழுவை நாங்கள் ஆரம்பித்தோம். அவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

2001 இல் எங்களது 'தேன்நிலா' என்ற சுய உதவிக் குழு ஆரம்பிக்கப்பட்டது. 2001 முதல் 2008 வரையிலும் இயங்கி வந்தோம். யுத்தம் காரணமாக இடை நிறுத்தப்பட்டு இடம்பெயர்ந்து சென்று விட்டோம். காசு சேமிப்புக்கள் இருந்தது. அவை எல்லாம் உடைக்கப்பட்டு இல்லாமற் செய்யப்பட்டது. மீளவும் 2012 இல் ஆறாம் மாதம் தேன்நிலா சுய உதவிக் குழுவை ஆரம்பித்தோம். விடுபட்ட அங்கத்தவர்களை விட ஏனைய அங்கத்தவர்களை வைத்து ஆரம்பித்தோம். ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எல்லாப் பெண்களும் ஒன்று கூடக் கூடிய நேரத்தை இணைத்துக் குழுக் கூட்டம் நடத்துவோம்.

கேள்வி; குழுச் செயற்பாடுகள் பற்றிக் கூறுவீர்களா?

பதில்; குழுச் செயற்பாடுகள் என்பது பொதுப் பணிகளில் ஈடுபடுதல், சிரமதானம், குழு அங்கத்தவர் வீட்டில் துக்கமோ சந்தோசமோ நடந்தால் குழுவாகச் சேர்ந்து உதவி செய்வது. ஒரு வங்கி அமைப்பு போன்று எங்களது ஆவணங்களை எல்லாம் தயார்ப்படுத்திக்கொண்டோம். மகாசக்தி ஊடாகத்தான் நாங்கள் ஆவணங்களைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றோம். ஒவ்வொருவடைய பதிவுகளும் அந்தந்த தாய் புத்தகத்தில் இருக்கும். அத்தோடு ஏனைய புத்தகங்களையும் கையாளக் கூடியதாக வைத்திருக்கின்றோம். எங்களுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 தொடக்கம் 20 வரையில் இருப்பார்கள். குறுகிய காசினை சேமிக்க வேண்டும் என்றால் அங்கத்தவர்களும் ஓரளவுக்கு இருக்க வேண்டும். நாங்கள் அங்கத்தவர்கள் 20 பேருடன் மட்டுப்படுத்திக் கொள்வோம். ஆறு பேருடன் ஆரம்பித்து 20 வரையிலும் பகுதி பகுதியாக ஆரம்பித்தோம்.

கேள்வி; சுய உதவிக் குழுவின் நோக்கம் என்ன?

பதில்; இதன் நோக்கம் தனியாக சேமிப்பு மட்டுமல்ல. அதாவது சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற விடயங்களை பெண்களுக்குள் கட்டி எழுப்ப வேண்டும். நலிவுற்ற பெண்கள் என்று சொல்லும் போது அவர்களும் சாதாரண மக்களோடு சாதாரண மக்களாக இயங்க வேண்டும் அல்லது மதிக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியாக பார்க்கும் போது உண்மையிலே குழுக்களில் காசுகளை கடன்களை எடுத்து வீட்டுத் தோட்டங்கள் செய்தல், வியாபாரங்கள் செய்தல், கால் நடைகளைப் பெற்றுக் கொள்ளல் போன்ற விடயங்களில் ஈடுபடுகின்றனர். குழுக்கள் வளர்ந்து கொண்டு வரும் போது காசின் தொகை கூடும் போது அவர்கள் பெரிய வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

கேள்வி; குழுவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில்... ?

பதில்; மாற்றங்கள் என்று கூறும் போது ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் புரிந்துணர்வின்றி செயற்படுவதை தவிர்க்க வேண்டும். எங்களுடைய குழுக்களுக்கு கிடைத்த பயிற்சி வகுப்புக்கள், தலைமைத்துவப் பயிற்சி, அணி திரட்டுதல் எப்படித் திரட்டலாம் என்று இப்படியான விடயங்கள் கிடைக்கப் பெற்றதால் ஒரே நேரத்தில் குழுவில் மூன்று பேர் கடன் எடுக்கப் போகிறார் என்றால் அவர்களில் யாருக்கு கட்டாயம் தேவை ? முதல் தேவை எது? அடுத்த தேவைக்குரிய கடனைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற மனப்பாங்கு ரீதியிலான மாற்றம் குழுக்களிடையே ஏற்பட்டுள்ளன.

சமூகத்தில் பெண்கள் வெளியே வருவது மிகவும் கஷ்டம். தனியே வீட்டு வேலை. பிள்ளைகளை பராமரித்தல் போன்ற மனப்பாங்கோடு இருந்தவர்கள். தாங்கள் வேலைக்குப் போக வேண்டும். தங்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினை இருக்கிறது. கட்டாயம் ஏதோ ஒரு வழியில் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலைக்குப் போக முடியாதவர் வந்து வீட்டில் ஒரு வருமானத்தை ஈட்ட வேண்டும். கணவனுக்கு உதவியாக தான் ஒரு வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற நிலைப்பாடு பெண்களிடத்தில் வந்திருக்கின்றது. கூட்டம் ஒன்று சொன்னால் ஆண்கள் மாத்திரம்தான் செல்வார்கள். பெண்கள் செல்வதில்லை. பெண்கள் செல்வது குறைவு. அந்த நிலை மாறி இருக்கிறது. கூட்டமெனில் பெண்களும் அதிகமாக கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. நாங்கள் எல்லா ஆவணங்களையும் பயன்படுத்துவதால் எங்கள் குழுக்களிடையே முரண்பாடுகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கும். ஏனென்றால் வாராந்தம் அவர்களுடைய பதிவுகளை நாங்கள் செய்கின்றோம். ஆதலால் தங்களுடைய ஆவணங்கள் சரியாக இருக்கிறது. கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறது என்று அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.

கேள்வி; பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த சுய உதவிக் குழுவால் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்?

பதில்; உண்மையிலே பிள்ளைகளுக்கு போசாக்கான உணவைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் வீட்டுத் தோட்டங்களைச் செய்வதால் நோயற்ற பிள்ளைகளாக உருவாக்கப்படுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் போது அதற்கு காசு கட்ட முடியாமல் இருக்கும் பட்சத்தில் கணவன் கூலி வேலைக்குச் சென்று அதற்கு பணம் கிடைக்கவில்லை என்று இருந்தால் அந்த சுய உதவிக் குழுவில் இருந்து தான் சேமித்த பணத்தில் இருந்து எடுத்து அந்தப் பிள்ளையினுடைய கல்வித் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.

அதேவேளையில் உணவுத் தேவைகளையும் கூட சிலவேளைகளில் இன்றைக்கு உணவைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் உண்மையிலே அந்தப் பெண் வந்து தான் சேமித்த பணத்தில் இருந்து அவசரமாக ஒரு கடனைப் பெற்று தன்னுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யலாம். குடும்பத்திலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது. வெளியே செல்ல வேண்டாம் என்று மறுக்கக் கூடிய கணவன்மார்களுடைய குணவியல்புகள் மாறியுள்ளன. தனது மனைவியோ, பிள்ளையோ அம்மாவோ இவ்வாறு ஒன்று சேர்வதால் தன்னுடைய தொழிலுக்கோ வீட்டுத் தேவைக்கோ கடனைப் பெற்றுக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கிறது.

கேள்வி; உங்களது சமூகப் பணிகள் குறித்து?

பதில்; எமது சமூகப் பணி என்பது சமூகத்தில் என்ன செயற்பாடுகள் நடந்தாலும் குழு உறுப்பினர்கள் எல்லோரும் பங்கு எடுக்க வேண்டும். இதுவும் எங்களுடைய எதிர்கால நோக்கம் ஆகும். சேமிப்பின் ஊடாக நிறைய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஆலயங்கள், பொது இடங்கள் குழுவாகச் சென்று சிரமதானம் செய்வது. குழுவில் உள்ள ஒருவர் வீட்டில் மரணம் எவையேனும் சம்பவம் ஏற்பட்டு விட்டால் நாங்கள் எல்லோரும் சேமிப்புப் பணத்தில் எடுக்காமல் மேலதிகமாகப் பணம் சேர்த்து நாங்களும் அவர்களது குடும்பதைப் போல உறவுக்காரர்களாக இருந்து அவர்களுக்கு சமைத்துக் கொடுத்து பதாகைகள் , அஞ்சலிப் பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கி வருகின்றோம்.

கேள்வி; காவேரிக் கலா மன்றம் இயக்குனர் வண.பிதா அடிகளார் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்; காவேரிக் கலா மன்றத்துடன் எங்களுக்கு தொடர்பு ரொம்பக் குறைவு. நான் அதற்குள் போய் ஒரு வருடம் இருக்கும். காவேரிக் கலா மன்றத்தின் இயக்குநர் வண பிதா யோசுவா அடிகளாருடன் நான் இரண்டு மூன்று தடவைகள்தான் கதைத்துள்ளேன். அவருடன் நெருக்கமான பழக்கம் இல்லை. அவர்கள் பொதுத் தொண்டு சேவைகள், வாழ்வாதார உதவிகள் செய்து வருகிறார்.

நான் கேள்விப்பட்ட வகையில் அவருடைய பணிகள் அளவற்றது. ஊரில் உள்ளவர்கள் அவர் பணியைப் பற்றி வியந்து பாராட்டுவார்கள். கொரோனா காலத்தில் நான் செய்து வந்த காளான் பயிர்ச் செய்கை அப்படியே நட்டம் அடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து செய்து கொள்ள முடியாமல் இருந்தேன். அப்பொழுது அவருடைய நிதி உதவி எனக்கு கிடைத்தது.

அவருடைய சேவை பரந்துபட்டது. அவர் நலிவுற்ற மக்களை இனங்கண்டு நிறைய உதவிகளை செய்து வருகிறார். அதற்கான களப்பணியாளர்களை நியமனம் செய்து மனிதாபிமான பொது தொண்டுப் பணிகளை மேற் கொண்டு வருகிறார். அவருடன் நேராகக் கதைத்து எங்களுடைய தேவையைப் பெற்றுக் கொள்ளா விட்டாலும் எங்கள் குழுவிலுள்ளவர்களுக்கு எங்கள் பிரதேச மக்களுடைய வாழ்வாதார தேவைகளையும் மற்றும் வீடு வசதிகள், நீர் வசதிகள் எனப் போன்ற நிறைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

அவர் இவ்வாறு பொதுப்பணிகளை செய்கிறார் என்பது தெரியும். அவருடன் பெரியளவில் பழக்கம் இல்லை என்ற படியால் நான் அதைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை. கடந்த வாரம் ஓரிடத்திற்குச் சென்றேன். அவர் ஊருக்கும் நலிவற்ற மக்களுக்கும் ஆற்றுகின்ற பணிகள் ஏராளம். ஏழை மக்களிடத்தில் அவருக்கு அதிக மதிப்பு இருக்கிறது. அவர் பாமர மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார் என்று அங்குள்ளவர்கள் பாராட்டிப் பேசினார்கள். அவர் கொடுக்கின்ற உதவியைக் கொண்டு முன்னேற வேண்டும் என்பது அந்த உதவியைப் பெற்றுக் கொள்கின்றவர்களின் கையில்தான் இருக்கிறது.

கேள்வி; நாங்கள் இந்தக் கடன் உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது ?

பதில்; எங்களுடைய சுயதொழில் உதவிக் குழுவைப் பொறுத்தவரையில் கடன் உதவியின் மூலம் வீட்டுத் தோட்டம். கால்நடை வளர்ப்பு காளான் செய்கை போன்ற வேலைகள் செய்கின்றோம். உதாரணமாக நான் அதிகளவு காளான் பயிர்ச் செய்கை செய்கிறேன். சிலர் மாடுகளும் வளர்க்கிறார்கள். அவர்கள் கையில் ஒரு தொகை பணம் இருந்தால் சுய உதவிக் குழுவில் கடனைப் பெற்றுக் கொள்ள முடியும். என்னுடைய தொழிலைச் செய்வதற்கு ஒரு இலட்சம் தேவையெனில் தன்னிடம் 50,000 ரூபா இருந்தால் சுய உதவிக்குழுவில் 50,000 ரூபா கடன் பெற்றுக் கொண்டு தொழிலை ஆரம்பிக்கலாம்.

கேள்வி; நீங்கள் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கும் பணிகள் பற்றி?

பதில்; சர்வதேச மகளிர் தினத்தில் தேனீர் உபசாரம் செய்கிறோம். எல்லோரும் ஒன்று கூடலுடன் பால் நிலை சமத்துவம் தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடலை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றோம். கணவனுக்கு இதுதான் வேலை. மனைவிக்கு இதுதான் வேலை என்று வரையறுக்கப்பட்ட நிலையினால்தான் குடும்பத்தில் வன்முறைகள் ஏற்படுகின்றன. குடும்பம் என்பது இரண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கிறது. குடும்பத்தில் இரண்டு பேரும் பங்குடையவர்கள் என்ற அடிப்படையில் விழிப்புணர்வுகளைச் செய்து வருகின்றோம்.

கணவன் வேலைக்குச் சென்றால் வேலைக்கும் சென்று வரும் மனைவியும் தன்னுடைய வேலைகளை எல்லாம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் கணவன் தொலைக் காட்சிக்கு முன்னால் இருப்பார். நாளாந்தம் கூலி வேலைக்குச் சென்று வருபவர் இல்லத்தில் இது நடக்கிறது. அவற்றை நாங்கள் மெல்ல மெல்ல சொல்லித்தான் மாற்றம் செய்ய வேண்டும்.

கேள்வி; சுய உதவி குழு எவ்வாறு உருவாக்கி வருகின்றீர்கள்?

பதில்; இரண்டு குழுவும் ஒரே இடத்திலேயே இயங்குகின்றன. மகா சக்தி என்பது அது எங்களுடைய சம்மேளனம். நாங்கள் கிராமங்களில் குழுக்களை உருவாக்குகின்றோம். 15-20 பேர் வரையிலான அங்கத்தவர்கள் கொண்ட குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு கிராமத்தில் 8-12 பேர் வரையிலும் அங்கத்தவர்களைக் கொண்ட குழுக்களுள் உள்வாங்கப்படுகின்றனர். ஒரு குழுவில் இருந்து மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்து கொத்தணியை உருவாக்குகின்றோம். கொத்தணியின் செயற்பாடு என்னவென்றால் அந்தக் குழுக்களைப் பார்ப்பது, கணக்காய்வு செய்து, அவர்களுக்கு பயிற்சிகள் வழங்குதல், குழுக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்தல், போன்ற விடயங்களை கொத்தணி பார்த்துக்ெகாள்ளும். ஒவ்வொரு கொத்தணியில் இருந்து மூன்று உறுப்பினர்களைத் தெரிவு செய்து நாங்கள் சம்மேளனம் என்ற ஒன்றை உருவாக்குவோம். இந்த குழுவின் நோக்கம் முழுமையாகச் சேமிப்பு மட்டுமல்ல சிறுவர்கள் பெண்கள், எல்லோருக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.


Add new comment

Or log in with...