'ஹரக் கட்டா', 'குடு சலிந்து' 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை

மடகஸ்காரில் கைதான பிரபல போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக, 'குடு சலிந்து' என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக ஆகிய இருவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இது தொடர்பான அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேடப்பட்டு வந்த குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவப்பு அறிவித்தலை வழங்க சர்வதேச பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதற்கமைய சந்தேகநபர்கள் மடகஸ்கர் நாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அடங்கிய குழுவொன்று அந்நாட்டுகுச் சென்று சந்தேகநபர்களை நேற்றையதினம் (15) இலங்கைக்கு அழைத்து வந்திருந்தனர்.


'ஹரக் கட்டா' வின் கடவுச்சீட்டு (
ஹேரத் திஸாநாயக்க ரொஷான் இசங்க எனும் போலி பெயரில்)

விமான நிலையத்தில் இதற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, சந்தேகநபர்கள் பயணிகள் வருகை தரும் பகுதியில் அல்லாமல் சரக்கு வெளியேற்றப்படும் பகுதியால் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்ய்பபட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள விபரம்
இயற் பெயர்: விக்ரமரத்ன நதுன் சிந்தக
அழைக்கப்படும் பெயர்: 'ஹரக் கட்டா' (மாட்டு வாய் கொண்டவர்)
வயது: 32
வசிப்பிடம்: வெலிகம, மிதிகம

இயற் பெயர்: செல்லக்பெருமகே சலிந்து மல்ஷிக குணரத்ன
அழைக்கப்படும் பெயர்:
'குடு சலிந்து' (தூள் சலிந்து)
வயது : 27
வசிப்பிடம்: குடா அருக்கொட, அலோபோமுல்ல, பாணந்துறை

மேற்படி சந்தேகநபர்கள் தொடர்பில் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் உத்தரவிடப்பட்டதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...