- CID யில் முன்னிலைப்படுத்தி வாக்குமூலம் பதிவு
- நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மடகஸ்காரில் கைதான பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களும் தேடப்பட்டு வந்து சந்தேகநபர்களும் 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக, 'குடு சலிந்து' என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மடகஸ்கார் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) விசேட குழுவினர் இன்று (15) காலை அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்திருந்தனர்.
சந்தேகநபர்கள், கென்யா மற்றும் இந்தியா ஊடாக இன்று மு.ப. 7.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய சரக்கு முனையத்தின் ஊடாக CID யினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் CID அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுவதோடு, அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் 07 ஆம் திகதி 'ஹரக் கட்டா' மற்றும் 'குடு சலிந்து' உள்ளிட்ட சிலர் மடகஸ்காரில் உள்ள விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, குறித்த கைது தொடர்பில் மடகஸ்கார் அதிகாரிகள் இலங்கைக்கு உறுதிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் (நதுன் சிந்தக) மனைவி எனத் தெரிவிக்கப்படும் வெளிநாட்டு பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசேட குழுவொன்று அண்மையில் மடகஸ்காருக்குச் சென்றிருந்த நிலையில், குறித்த குழு இன்றையதினம் இலங்கை வந்தடைந்திருந்தது.
Add new comment