இந்திய வீடமைப்பு: 3ஆம் கட்ட நிர்மாணத்திற்கு வீடொன்றுக்கான ஒதுக்கீடு மும்மடங்காக அதிகரிப்பு

- வீடமைப்புத் திட்டங்களை துரிதமாக நிறைவேற்ற வாய்ப்பு

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்குமான தனி அலகிற்கான ஒதுக்கீட்டினை மும்மடங்காக அதிகரிப்பதற்கான இராஜதந்திர கடிதங்கள் இந்திய உயர் ஸ்தானிகர்  கோபால் பாக்லே  மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் பரிமாறப்பட்டன.

இதன் காரணமாக மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களினதும் 7 மாவட்டங்களிலும் பரவிக்காணப்படும் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய நன்கொடையின் கீழ் மூன்றாம் கட்டமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் 4000 வீடுகளில் மீதமுள்ள வீடுகளை துரித கதியில் பூர்த்திசெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 

இந்திய வீடமைப்புத்திட்டங்களின் கீழ் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும்  இதுவரை முன்னெடுக்கப்பட்ட முதல் இரண்டு கட்டங்களிலும் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியினால் அறிவிக்கப்பட்டதற்கமைவாக அடுத்தகட்டமாக பெருந்தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.

பெருந்தோட்டப் பகுதிகளில் பரந்துவாழும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகம் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் இந்த முக்கியமான தருணத்தில் குறித்த இராஜதந்திர கடிதங்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

வீடமைப்புத் திட்டங்களுக்கு மேலதிகமாக கல்வி, சுகாதாரம், தொழில் பயிற்சி, வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் ஏனைய பல்வேறு துறைகளில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகத்தினருக்காக இந்திய அரசாங்கத்தால்  வழங்கப்படும் மக்களை மையப்படுத்திய நன்கொடைத் திட்டங்களை அமுலாக்குவதில் முக்கிய பங்குவகிக்கும் கண்டியில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயம் ஸ்தாபிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைந்தமைக்கு சமாந்தரமாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தருணங்கள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முக்கிய நிகழ்வுகளும் அதேபோல இரண்டு அயல் நாடுகளுக்கிடையிலுமான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டமையின் 75 ஆண்டுகள் நிறைவும் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களால் ஒழுங்கமைக்கப்படும் பல கூட்டு முன்னெடுப்புகள் மூலம் அனுஷ்டிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...