ஊழல் எதிர்ப்பு சட்டமூலம், ETF சட்ட ஒழுங்குவிதிகள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு

- இயலாமையுடன் கூடிய நபர்களின் உரிமைகள் தொடர்பில் சட்டமூலம்
- கடந்த வார அமைச்சரவையில் 6 முக்கிய தீர்மானங்கள்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 1981.01.23 அதிகதிய அரச வர்த்தமானி இலக்கம் 125 இல் வெளியிடப்பட்ட ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் திருத்தப்பட்டு உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் 2311/39 ஆம் இலக்க 2022.12.22 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதா உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இயலாமையுடன் கூடிய நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலம்
இயலாமையுடன் கூடிய நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் இலங்கை அரசு 2016 ஆம் ஆண்டில் கையொப்பமிட்டுள்ளது.

குறித்த சமவாயத்தின் 04 ஆவது உறுப்புரைக்கமைய இயலாமைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எவ்வித பாகுபாடுகளின்றி சகல இயலாமையுடன் கூடிய நபர்களின் அனைத்துவித மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் போன்றவற்றை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், அதுதொடர்பான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இயலாமையுடன் கூடிய நபர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் சட்டத்தை முடிவுறுத்தி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவும், மேற்படி குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆரம்ப சட்டவரைபை அடிப்படையாகக் கொண்டு குறித்த கருமங்களுக்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதியும், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. ரிதியகம புனர்வாழ்வு நிலையத்தை மத்திய அரசுக்குக் கீழ்க் கொண்டு வரல்
1975 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ரிதியகம புனர்வாழ்வு நிலையம் 1990 ஆம் ஆண்டு தென்மாகாண சபை சமூக அலுவல்கள் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் கிட்டத்தட்ட 450 பேருக்கு மாத்திரமே தங்கியிருந்து புனர்வாழ்வளிக்கக்கூடிய வசதிகள் இருப்பினும், தற்போது 576 பேர் தங்கியிருந்து புனர்வாழ்வு பெறுவதால் புனர்வாழ்வு பெறுபவர்கள் மிகவும் அழுத்தங்கள் மற்றும் சிரமங்கள் பலவற்றுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்நிலைமையாலும், நாடளாவிய ரீதியில் நீதிமன்றக் கட்டளைகளுக்கமைய ஒப்படைக்கப்படுபவர்களும் இந்நிலையத்தில் தங்கியிருந்து புனர்வாழ்வு பெறுவதையும் கருத்தில் கொண்டு, குறித்த இப்புனர்வாழ்வு நிலையத்தை தென்மாகாண சபையின் நிர்வாகத்திற்குப் பதிலாக தேசிய மட்டத்திலான நிலையமாக மத்திய அரசின் கீழ் நிர்வகிப்பது மிகவும் பொருத்தமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, ரிதியகம புனர்வாழ்வு நிலையத்தை சமூக சேவைகள் திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்காக மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதியும், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சந்திரிக்கா குளம் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரிஇப்பன் குளம் போன்ற நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பில் மிதக்கும் சூரிய மின்கல மின்னுற்பத்தித் தொகுதியை அமைக்கும் முன்னோடிக் கருத்திட்டம்
கொரிய குடியரசுக்கும், இலங்கைக்கும் இடையில் 2009 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட உதவி வழங்கும் வேலைச் சட்டகத்தின் கீழ் கொரிய குடியரசின் வர்த்தக, கைத்தொழில் மற்றும் வலுசக்தி அமைச்சரால் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சந்திரிக்கா குளம் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரிஇப்பன் குளம் போன்ற நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பில் மிதக்கும் 01 மெகாவோற் இயலளவு கொண்ட சூரிய மின்கல மின்னுற்பத்தித் தொகுதி நிறுவுவதற்கான முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 6.83 பில்லியன் கொரியா வொன்களை வழங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

கொரிய குடியரசு சார்பில் இம்முன்னோடிக் கருத்திட்டத்தை கண்காணிக்கும் நிறுவனமாக Korea Institute for Advancement of Technology நிறுவனம் செயலாற்றும்.

அதற்கமைய எட்டப்பட்டுள்ள உடன்பாடுகளுக்கமைய, குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்காக கொரிய குடியரசின் Korea Institute for Advancement of Technology நிறுவனம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையே கலந்துரையாடல் குறிப்பில் கையொப்பமிடுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
உள்ளூர் விமான சேவையின் பாதுகாப்புக்கு ஏற்புடையதான சட்ட வரையறைகளைப் புதுப்பித்தல், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், மற்றும் உள்ளூர் விமான சேவைகளுக்கான பொறுப்பு வரையறைகளை அடையாளங் காண்பதற்காக 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022.08.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தப்பட்ட) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...