இந்தியாவில் பரவும் புதுவித காய்ச்சல்; இலங்கை மருத்துவர்கள் விஷேட கவனம்

கொரோனா போன்ற அறிகுறியுடன் இந்தியாவின் சில மாநிலங்களில் புதுவிதக் காய்ச்சலொன்று பரவி வருகிறது. இது H3N2 எனப்படும் வைரஸினால் ஏற்படுத்தப்படும் காய்ச்சல் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும் அடையாளப்படுத்தியுள்ளன.

இக்காய்ச்சல் காரணமாக ஹரியாணாவில் ஒருவரும், கர்நாடகாவில் ஒருவரும் என இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள், வளர்ந்தவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடிய இவ்வைரஸ், நாட்பட்ட நோய்களுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களுக்கும் முதியர்களுக்கும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இந்நிலையில் இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டில் ஜனவரி மாதம் முதல் பருவகால காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இற்றை வரையும் 3,038 பேர் H3N2 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவகால காய்ச்சல் என்பது இன்புளூவென்ஸா வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச நோய்த்தொற்று ஆகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் காணப்படுகின்றன. ஒன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலம், மற்றொன்று மழைக்காலத்திற்குப் பிந்தைய காலம். பருவகால காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் மார்ச் மாத இறுதியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளது.

பலருக்கும் சுவாசப் பிரச்சினைகளை உருவாக்கும் இந்த இன்ப்ளூவென்சா - ஏ வகையைச் சேர்ந்த H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும் அடையாளப்படுத்தியுள்ளன. H3N2 வைரஸ் என்பது ஒரு பருவ கால காய்ச்சல் ஆகும். தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டுள்ள இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் பேசும் போதோ, இருமும் போதோ வெளியேறும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. இணை நோய்களைக் கொண்ட சிறு குழந்தைகளும் முதுமை அடைந்துள்ளவர்களும் இவ்வைரஸ் காய்ச்சலினால் அதிகம் பாதிக்கப்படலாம்.

இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, உடல் வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படலாம். இவற்றுடன் சேர்த்து மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர காய்ச்சல், நெஞ்சுப்பகுதியில் வலி, எதையும் சாப்பிட முடியாத நிலை, தலைசுற்றல், வலிப்பு போன்ற அறிகுறிகளும் கூட ஏற்பட முடியும்.

H3N2 வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அதில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் ஒருவர் குறிப்பிடுகையில், 'H3N2 வைரஸ் காய்ச்சல் மிக ஆபத்தானது என்று கூறமுடியாது. இது சாதாரண பருவ கால காய்ச்சல்தான். இவற்றை மூன்று வகையாக பிரித்துகொள்ளலாம். ஏ வகை என்பது வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. பி வகை என்பது காய்ச்சல் 5 நாட்கள் வரை இருக்கும். அதை தொடர்ந்து உடம்பு வலி இருக்கும்.

சி என்பது இணை நோய் உள்ளவர்கள் H3N2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும்போது அவர்களின் பிரதான நோயின் பாதிப்பு அதிகரித்து மரணம் ஏற்படக்கூடும்' என்றுள்ளார்.

மேலும், இவ்வைரஸ் நுரையீரலை பாதிக்கும்போது, நிமோனியா வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தாமதியாது மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம் என்று மற்றொரு மருத்துவ நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தற்போதைய சூழலில் முகக் கவசம் அணிந்து கொள்ளுதல், சன நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றை பின்பற்றுவது அவசியம் என்றும், குழந்தைகளைப் பொறுத்தவரை இன்புளூவென்சாவில் இருந்து தற்காத்து கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ள முதியவர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தத் தவறக்கூடாது.

தற்போதைய சூழலில் காய்ச்சல் ஏற்படும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதன் ஊடாக இக்காய்ச்சல் அதிகம் பரவுவதை தவிர்த்துக் கொள்ளலாம். அத்தோடு பிறருடன் கை குலுக்குதல், பொது இடங்களில் எச்சில் துப்புதல், மருத்துவர்களின் ஆலோசனையின்றி நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பாவித்தல், மற்றவர்களுடன் சேர்ந்து உணவு அருந்துதல், நெருக்கமாக அமர்தல் என்பவற்றைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் இந்திய மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.

இவ்வைரஸ் காய்ச்சலுக்கு ஒருமுறை உள்ளானால் உடலில் அவ்வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகிவிடும். அதனால் இவ்வைரஸ் மீண்டும் உடலுக்குள் வந்தாலும் அதனால் நோய் நிலையை ஏற்படுத்த நோய் எதிர்ப்பு சக்தி இடமளிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வைரஸ் காய்ச்சல் தொடர்பில் இலங்கை மருத்துவர்களும் விஷேட கவனம் செலுத்தியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது சுட்டக்காட்டத்தக்கதாகும்.


Add new comment

Or log in with...