இந்தியாவின் தலா வருமானம் இரு மடங்காக அதிகரிப்பு

- உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி

இந்தியாவின் தனிநபர் வருமானம் இரு மடங்காக அதிகரித்துள்ளது  என்று அந்நாட்டு தேசிய புள்ளி விபரவியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014 - 2015 இல் ஆட்சிக்கு வந்தது முதல் இற்றை வரையான காலப்பகுதியில் இவ்வதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

2014 - 15 இல் ரூ. 86,647 ஆகக் காணப்பட்ட தனிநபர் வருமானம் 2022 - 2023 இல் ரூ. 1,72,000 ஆகக் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் உண்மையான அடிப்படையில் நிலையான விலைகளைக் கொண்டு நோக்கும் போது தனிநபர் வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, கொவிட் 19 பெருந்தொற்று காலப்பகுதியில் தனிநபர் வருமானத்தில் வீழ்ச்சியை அவதானிக்க முடிந்ததாகவும் தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, முன்னணி பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமொன்றின் முன்னாள் பணிப்பாளரான பினாகி சக்ரபோர்த்தி கூறுகையில், 'உலக அபிவிருத்தி சுட்டி தரவுகளின் படி, 2014 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் இந்தியாவின் தனிநபர் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 5.6 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம். சுகாதாரம், கல்வி, பொருளாதார மற்றும் சமூக இயக்கம் என்பவற்றில் முன்னேற்றங்களை எம்மால் அவதானிக்க முடிகிறது.  கொவிட் 19 பெருந்தொற்று எம்மை மோசமாகப் பாதித்த போதிலும் கொவிட்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார மீட்சியை குறிப்பிடத்தக்களவில் எம்மால் அடைந்து கொள்ள முடிந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, கைத்தொழில் அபிவிருத்திக்கான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் நாகேஷ் குமார் குறிப்பிடுகையில், 'உண்மையில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதோடு அதன் செழுமையும் பிரதிபலிக்கிறது.  உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து பிரகாசமான இடத்தில் உள்ளது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் உலகின் பல நாடுகள் பொருளாதார மந்தநிலைக்கு முகம் கொடுத்துள்ள போதிலும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக எமது பொருளாதாரம் காணப்படுகிறது' என்றுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பீடுகளின் படி, இந்தியா இங்கிலாந்தை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா காணப்படுகிறது. ஆனால் இற்றைக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர்  பெரிய பொருளாதாரங்களில் 11 வது இடத்தில் இந்தியா காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்று 'எக்கோனமிக்ஸ் ரைம்ஸ்' தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...