சுமார் 10.5 கிலோகிராம் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முயற்சித்த 5 பேரை கைது செய்துள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (11) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 141 எனும் விமானத்தில் மும்பை செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர்களின் பயணப் பொதிகளை சோதனையிட்ட போது அதில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில், ரூ. 160 மில்லியன் (ரூ. 16 கோடி) பெறுமதியான சுமார் 10.5 கி.கி. தங்க கட்டிகள், தங்க ஜெல்கள், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, விமான நிலைய குடிவரவு பகுதியில் சந்தேகத்திற்கிடமான இந்திய பிரஜை ஒருவர் இந்த கடத்தல் தொடர்பில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Add new comment