சுகாதார உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உலக வங்கி ஒரு பில். டொலர் நிதியுதவி

- தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு முன்னுரிமை

இந்தியாவின் சுகாதார பராமரிப்பு துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவென ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது. இக்கடனுதவி இரு கட்டங்களாக வழங்கப்பட உள்ளன.

இது தொடர்பான உடன்படிக்கையில் இந்தியாவின் பொருளாதார விவகாரத் திணைக்கள மேலதிகச் செயலாளர் ரஜட் குமார் மிஷ்ராவும் உலக வங்கியின் நாட்டுக்கான பணிப்பாளர் ஒக்ஸ்டே டனோ குவாமேயும் கையெழுத்திட்டுள்ளனர். 

இக் கடனுதவியின் ஊடாக தமிழ்நாடு,  ஆந்திர பிரதேசம், கேரளா, மேகாலயா, பஞ்ஜாப், ஒடிசா  மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களின் சுகாதார சேவையின் உட்கட்டமைப்பு வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தப்படவிருக்கின்றன. 

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், 'கொவிட் 19 பெருந்தொற்றானது, உலகெங்கிலும் பெருந்தொற்றுக்கு எதிராகத் தயாராக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதோடு உலகளாவிய ரீதியில் சுகாதார பராமரிப்பு துறையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் தோற்றம் பெறக்கூடிய பெருந்தொற்றுகளுக்கு எதிராக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா எடுத்துள்ள தீர்மானத்திற்கு இவ்விரு விடயங்களும் ஆதரவளிப்பதாக உள்ளன. அதன் பயனாக இத்திட்டத்தை முன்னெடுக்கவென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களின் மக்கள் பெரிதும் நன்மை அடைவர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...