தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம்: 2016 இற்கு பின்னரான அரச ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்

- பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானிப்படுத்தி, பராளுமன்றில் நிறைவேற்றல்
- சுங்க பொருட்கள் சோதனையை விரைவுபடுத்தல்; சட்டத்தை திருத்த அமைச்சரவை உப குழு
- மின்கலங்கள் மூலம் இயங்கும் பஸ்களை பயன்படுத்த திட்டம்
- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 13 முக்கிய முடிவுகள்

புதிய அரச சேவை ஊழியர்கள் மற்றும் ஜனவரி 2016 இற்கு பின் அரச சேவையில் இணைந்தவர்களுக்கு, பணியாளரின் 8% பங்களிப்பு, தொழில்வழங்குனரின் 12% பங்களிப்புடன் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவி ஓய்வூதியம் வழங்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

1. தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை தாபித்தல்
அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்கள் இளைப்பாறிய காலத்தில் அனுகூலங்களுடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும், இளைப்பாறிய ஊழியர்கள் நாட்டுக்கு சுமையின்றி தமது ஓய்வு காலத்தைக் கழிப்பதற்கும் பொருத்தமான சூழலை உறுதிப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் எனும் பெயரிலான நிதியத்தைத் தாபிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச ஊழியர் ஒருவர் அரச சேவையில் இணைந்துகொண்ட பின்னர் அவருடைய அடிப்படைச் சம்பளத்தின் 8% வீதமும், தொழில் வழங்குநரின் பங்களிப்பாக 12% வீதமும் மாதாந்தம் உத்தேச நிதியத்திற்கு வைப்பிலிடுதல் வேண்டும். உத்தேச நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக முகாமைத்துவ சபையொன்றால் நிர்வகிக்கப்படும் சுயாதீன நிறுவனமொன்று தாபிக்கப்படுவதுடன், நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக விசேட தகைமைகளைக் கொண்ட நிதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

உத்தேச பங்களிப்பு ஓய்வூதிய முறைமை எதிர்வரும் காலங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் அரச ஊழியர்களுக்கு ஏற்புடையதாக அமைவதுடன், 2016 ஜனவரி மாதத்தின் பின்னர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்ற ஓய்வூதிய முறைக்கு இயங்கியொழுகுதல் வேண்டுமென்ற ஏற்பாடுகள், அவர்களின் ஆட்சேர்ப்பு நியமனக் கடிதங்களில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தமது சுயவிருப்பின் பேரில் உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதிய சம்பள முறையுடன் இணைந்து கொள்வதற்கு அவர்களுக்கும் இயலும். அதற்கமைய, தேவையான ஏற்பாடுகளை இயற்றுவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்
தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்காக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் விசாரணைகளைத் துரிதப்படுத்தல்
இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற சோதனைகள், விசாரணைகள் மற்றும் ஏனைய ஏற்புடைய செயன்முறைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீண்டகாலம் எடுப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் குறித்த பொருட்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுதல் மற்றும் அழிவடைதல் உள்ளிட்ட பல பொருளாதார நட்டங்கள் ஏற்படுவதால், அத்தகைய பொருட்கள் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் கடைப்பிடிக்கப்படும் தற்போது நிலவுகின்ற செயன்முறைகளைத் துரிதப்படுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த விடயங்களை ஆராய்ந்து, தேவையாயின் சுங்கக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவைக் குழுவொன்றை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

  • நிமல் சிறிபால டி சில்வா, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
  • (மருத்துவர்) ரமேஷ் பத்திரண, பெருந்தோட்டத்துறை அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர்
  • ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர்
  • திலும் அமுனுகம, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  • ஷெஹான் சேமசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர்

4. பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் பற்றிய தேசிய கொள்கை
பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்காக தேசிய கொள்கை தயாரிப்புக்காக 2022.09.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் பிரதான தொனிப்பொருள் துறைகள் 08 இன் கீழ் 'பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் பற்றிய தேசிய கொள்கை' தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. அவுஸ்திரேலியாவின் Sight for All’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
அவுஸ்திரேலியாவின் Sight for All’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்தால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் கண் சிகிச்சை அலகுகளுக்கு மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கும், மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் திறன் விருத்திக்கு உதவி வழங்குவதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதுளை மாகாண பொது மருத்துவமனை, இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் களுபோவில போன்ற போதனா மருத்துவமனைகள் மற்றும் தங்காலை ஆதார மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சைக்குத் தேவையான நவீன வசதிகளைக் கருத்தில் கொண்டு, பிராந்திய கண் சிகிச்சை அலகுகளில் கண் சுகாதார ஊழியர்களின் திறன் விருத்தியை ஏற்படுத்துவதற்கும், மற்றும் உபகரணங்களை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்தின் கீழ் 99.42 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப் பெறவுள்ளது. 

அதற்கமைய, உத்தேசிக்கப்பட்டுள்ள வழங்கலைப் பெற்றுக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் ‘Sight for All’  சமுதாயக் கருத்திட்ட நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சுக்கும் இடையிலான  உடன்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. அணுப் பொறுப்புக்கள் தொடர்பான பிரதான இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளில் இலங்கையும் ஒரு தரப்பினராதல்
இலங்கையின் எதிர்கால வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணு வலுச்சக்தி மாற்று வழிமுறையாகக் கொள்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு இணங்கியொழுகி அணுச்சக்தியைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்தல் பற்றி விடயங்களை ஆராய்வதற்காக நெறிப்படுத்தல்  குழுவொன்றும் 09 செயற்பாட்டுக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த செயற்பாட்டுக் குழுக்களால் தயாரிக்கப்பட்டுள்ள சுயமதிப்பீட்டு அறிக்கை பற்றி சர்வதேச அணு வலுசக்தி முகவராண்மை நிறுவனம் வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய, அணுச்சக்தியில் மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் கருத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கைக்கு இயலுமை உண்டு. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அணுப் பாதிப்புக்களுக்கான குடியியல் பொறுப்புக்கள் பற்றிய வியானா சமவாயம் மற்றும் அணுப் பாதிப்புக்களுக்கான குறைநிரப்பு இழப்பீட்டு சமவாயத்தின் தரப்பினர்களாவதற்கு பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சமவாயங்களில் தரப்பினராவதற்கு எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மற்றும் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. மின்னேற்றப்பட்ட மின்கலங்கள் மூலம் பஸ்களை இயக்குவதற்கான முன்னோடிக் கருத்திட்டம்
சர்வதேச வலுசக்தி நெருக்கடியின் மத்தியில் சுவட்டு எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு படிமுறையாக மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் வளங்களான சூரியசக்தியைப் பயன்படுத்தி பயணிக்கக்கூடிய பேரூந்துகளை அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு வர்த்தக நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, மேல்மாகாணத்தை உள்ளடக்கிய வகையில், இலங்கை பயணிகள் போக்குவரத்து சபைக்கு மின்னேற்றப்பட்ட மின்கலத்தில் இயங்குகின்ற பேரூந்துகளைப் பயன்படுத்துவதற்காக அரச – தனியார் பங்குடமைக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, முதன்மையாக முறையான சாத்தியவள கற்கையின் அடிப்படையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. விமானங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஜெட் ஏ-1 எரிபொருள் விநியோகத்திற்கான சந்தை வாய்ப்புக்களை விரிவுபடுத்தல்
விமானங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஜெட் ஏ-1 எரிபொருள் விநியோகம் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சமகாலத்தில் நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியால், ஜெட் ஏ-1 எரிபொருளை உற்பத்தி செய்கின்ற சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொழற்பாடுகள் முடங்கியுள்ளமையாலும், ஜெட் ஏ-1 எரிபொருளை இறக்குமதி செய்தல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சவால்மிக்க பணியாக உள்ளமையாலும், பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து விமானங்களுக்குத் தேவையான ஜெட் ஏ-1 எரிபொருளை விநியோகிப்பதற்கான மாற்று நடவடிக்கைகள் பற்றிய கவனம் செலுத்த நேரிட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜெட் ஏ-1 எரிபொருளை விமானங்களுக்கு விநியோகிப்பதற்கு தடைகள் ஏற்படாத வகையில், வேறு நாடுகளின் விமான சேவைகளுக்கு ஜெட் ஏ-1 எரிபொருளை விநியோகிக்கும் தரப்பினர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய ஜெட் ஏ-1 எரிபொருள் விநியோகிப்பதற்கு இயலுமை கொண்ட வேறு தரப்பினர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை வழங்குவதற்காக மின்சக்தி வலுசக்தி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. பங்களாதேசுடனான உத்தேச முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம்
பிராந்திய ரீதியாக பிரதான வணிகத் தரப்பினர்களுடன் நிலவுகின்ற தொடர்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் சந்தைத் தடைகளை நீக்கி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு சந்தை அணுகலுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தல், உள்ளூர் விநியோகம் தொடர்பாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக முதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு இணையாக இலங்கை மற்றும் பங்களாதேசத்திற்கும் இடையில் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக 2021.06.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பங்களாதேசத்துடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் தற்போது காணப்படுகின்ற வர்த்தக ஒப்பந்தங்களை விஞ்சிய இருதரப்பு வர்த்தகங்களை அதிகரிக்க முடியுமென இனங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் நெறிப்படுத்தலில் பங்களாதேசத்துடன் உத்தேச முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடலை துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவான ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
ரூபாவின் நாணப் பெறுமதி வீழ்ச்சியின் விளைவு மற்றும் உலக சந்தையின் பெறுமதிஃசெலவு, காப்புறுதி மற்றும் கப்பல் போக்குவரத்துக் கட்டணம் பெறுமதி போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு இயைபு முறைக் குறியீடு (HS Code)  677 இன் கீழான தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் மீது திட்டவட்டமான அலகொன்றுக்கான செஸ் வரி திருத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள் 2022.11.14 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள திகதி தொடக்கம் 04 மாதங்களுள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதற்கமைய, 2022.11.14 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்;ப்பிப்பதற்காக  முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரி நீக்கம்
நெல் விவசாயிக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் ஒருகிலோ நாடு நெல் 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்து குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு கிலோ நெல்லுக்கு விவசாயிக்கு செலுத்தப்படுகின்ற பணத்திற்கு மேலதிகமாக அரிசி உற்பத்தி செயன்முறையில் ஒரு கிலோ அரிசியை நுகர்வோருக்கு வழங்கும் வரைக்குமான நீர்க்கட்டணம், மின்சாரக்கட்டணம், களஞ்சிய வசதிகள், போக்குவரத்து போன்ற மேலதிக செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதற்கு மேலதிகமாக சமூகப் பாதுகாப்பு வரியாக ஒருகிலோ அரிசிக்கு 6.00/7.00 ரூபாவை செலுத்த வேண்டியிருக்கின்றமையை அரிசி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த செலவைக் குறைத்துக் கொள்வதற்காக ஓரளவு சலுகையை வழங்க முடியுமாயின் விவசாயிகளுக்கு அதிக விலையை வழங்க முடியுமென மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, சந்தையில் தற்போது நிலவுகின்ற அரிசியின் விலையை அவ்வாறே பேணிக்கொண்டு, ஒருகிலோ நாடு நெல்லுக்கு 100.00 ரூபாவுக்கு அதிகமான விலையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையிலும் நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்காக 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு அறவீட்டு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு பற்றிய புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்
தற்போது நடைமுறையிலுள்ள குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சிறந்த தரநியமங்கள் மற்றும் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு இயலுமாகும் வகையில் மிகவும் பொருத்தமான ஏற்பாடுகளை உள்வாங்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2021.03.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றிய தேசிய செயற்பாட்டுத் திட்டம்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையால் 2000 ஆம் ஆண்டில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு எனும் பெயரிலான முன்மொழிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், உலகில் விருத்தியடைந்த மற்றும் விருத்தியடையாத நாடுகள் பல இப்பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்துத் தரப்பினர்களின் பங்களிப்புடனும், உடன்பாடுகளுடனும் வரைவாக்கப்பட்டுள்ள 'பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றிய தேசிய செயற்பாட்டுத் திட்டம் - 2023-2027' இனை நடைமுறைப்படுத்துவதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...