தலதா மாளிகை அவதூறு; சேபால் அமரசிங்க மன்னிப்புக் கோரியதை அடுத்து விடுதலை

- ஜனவரி 05 கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்

புனித தலதா மாளிகை குறித்து அவதூறாக பேசியமை தொடர்பில் மன்னிப்புக் கோரியதையடுத்து, சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

அங்கு, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பிரதிவாதியான சேபால் அமரசிங்க நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால், வழக்கை நிறைவு செய்ய தயாராக இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்போது பெளத்த சமூகத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாக, திறந்த நீதிமன்றில் சேபால் அமரசிங்க அறிவித்தார்.

அத்துடன் முறைப்பாட்டாளரான பௌத்த தகவல் நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அகுருவெல்லே ஜினாநந்த தேரர் உள்ளிட்ட மன்றிலிருந்தோரிடம் அவர் மன்னிப்பு கோரினார்.

இதனையடுத்து, அவருக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய தயாராக இருப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் அறிவித்தார்.

இதனையடுத்து அவரை வழக்கில் இருந்து விடுவித்த நீதவான், வழக்கை நிறைவு செய்வதாக உத்தரவிட்டார்.

அதற்கமைய கடந்த ஜனவரி 05ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சேபால் அமரசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Add new comment

Or log in with...