க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் வேளையில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு, இலங்கை மின்சார சபைக்கு எழுத்தாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மனுவில் ஆணைக்குழுவின் ஏனைய இரு உறுப்பினர்கள் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் அதனை நிராகரிக்குமாறு, மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர.
குறித்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா, தம்மிக கணேபொல ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிப்பதாக உத்தரவிட்டனர்.
இதேவேளை, க.பொ.த. உயர் தரப் பரீட்சைக் காலத்தில் இலங்கை மின்சார சபை மின்வெட்டு மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (03) நிராகரித்துள்ளது.
Add new comment