நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வே சிறந்த தீர்வு

பாராளுமன்ற 04ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை

 அதிகாரத்துக்காக பொய் கூறுபவன் நானல்ல
 ஆறு மாதங்கள் கஷ்டத்தை தாங்கினால் சிறந்த தீர்வு
 நான்காவது காலாண்டில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு
 நாட்டைக் கட்டியெழுப்ப விரும்புவது சிறுவர்களும் இளைஞர்களுமே
 செய்யமுடியாதவற்றை ஒருபோதும் கூறமாட்டேன்
 நாட்டின் நலனுக்காக மக்கள் விரும்பாத முடிவுகளையும் எடுக்கத் தயார்
 ஒற்றையாட்சியில் அதிகார பகிர்வு
 சம்பந்தனுக்கும் எனக்கும் பொதுவான கனவு உண்டு
 திருகோணமலை நகரம் நவீன அபிவிருத்திக்கு உட்படுத்தப்படும்
 கிழக்குக்கு தனியான அபிவிருத்தி வேலைத்திட்டம்
 எமது பயணம் சரியானது என்பதை சர்வதேசம் உறுதிப்படுத்தியுள்ளது
 பூச்சியமான வெளிநாட்டு கையிருப்பை 500 மில்லியன் டொலராக அதிகரிக்க முடிந்துள்ளது.


"நீண்ட காலமாக தீர்வு காண முடியாதுள்ள இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழ் உச்சளவு அதிகாரப்பகிர்வை வழங்கி தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, திருகோணமலை சர்வதேச நவீன நகரமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் காங்கேசன்துறை துறைமுகம் விரிவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இன மத பேதமின்றி அனைத்து மக்களும் முகம் கொடுக்கும் பொது பிரச்சினைகளுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதிகாரப் பகிர்வினை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கான திருத்த வரைபுகள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரை நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து அக்கிராசன உரை நிகழ்த்திய ஜனாதிபதி, தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

நாட்டைப் பிளவு படுத்துவதற்கான எந்த ஒரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அதேவேளை, ஒற்றையாட்சியின் கீழ் உச்சளவு அதிகார பகிர்வு வழங்குவதே எமது எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டைப் பிரிப்பதோ அல்லது பிரிப்பதற்கு துணை போகும் எந்தவொரு நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ள மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி, இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இம்முறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றியளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்கும் முயற்சிகள் முன்னைய அனைத்து  சந்தர்ப்பங்களிலும் வெற்றியளிக்கவில்லை. எனினும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதற்காக அனைவரதும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 9 ஆவது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடரை நேற்ற ஆரம்பித்து வைத்து நாட்டின் அடுத்த 25 வருடங்களுக்கான அரசின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி:

சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவருக்கும் பொதுவான ஒரு கனவு உண்டு. நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குதல் ஆகும். அக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகின்றோம். முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

வடக்கு, கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. பல பிரதேசங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தன. இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம்.

வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதனை நாம் அறிவோம். பலாலி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன. மேலும் 3300 ஏக்கர் காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. ஏனைய பாதுகாப்பு முகாம்களை அண்மித்த காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் காணிகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சனை காணப்படுகிறது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் விமானப்படம் அடிப்படையாக கொள்ளப்பட்டது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளன. மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்கள்.1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம் காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். தேசிய காணி சபை ஒன்றை தாபிப்பதற்கான வரைவு தயாரிக்கப்படும். தேசிய காணிக்கொள்கை வரைவு தயாரிக்கப்படும்.

மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைவடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.சுகாதார துறை தொடர்பாகவும் இதே போல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரப் பகிர்வு செயன்முறையினை முறையாக மற்றும் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்காக பின்வரும் சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும். 1992 ஆம்ஆண்டின் 38 ஆம் இலக்க அதிகாரப் பகிர்வு (பிரதேச செயலாளர்கள்) சட்டம், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (இடைநேர் விளைவு ஏற்பாடுகள் சட்டம் மற்றும் 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் (திருத்த) சட்டம்

மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன முறையில் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையினை தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.இவ் அனைத்து சட்டங்கள் மற்றும் வரைவுகளை நாம் பாராளுமன்றத்தின் தேசிய சபைக்கு சமர்ப்பிப்போம். அது தொடர்பாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேசிய சபைக்கு வழங்கப்படும்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகள் தற்பொழுது மாகாண எல்லைகளின் பிரகாரம் காணப்படுவதில்லை. இதன் காரணமாக பிரயோக ரீதியான பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. ஆகவே மாகாணங்களின் பிரகாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம் பெறமாட்டாது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமை சட்டத்தை பாரதூரமான முறையில் மீறுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ எச் எம் டீ நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதன் பரிந்துரைகள் பற்றி நாம் கவனம் செலுத்துவோம்.

யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்காக புறம்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். மல்வத்துஓயா அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படும். கிழக்கு மாகாண நதிகள் மற்றும் நீரை முகாமை செய்தல், வடமாரச்சி குளம் மற்றும் களப்பு புனரமைப்பு, குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக அதன் மூலம் நீரை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காங்கேசன்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம். இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

பெருந்தோட்டத் துறைக்காக பாரியளவு சேவையாற்றிய செளமியமூர்த்தி தொண்டமானும் நானும் ஒன்றாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டோம். நாம் இருவரும் பெருந்தோட்ட மக்களின் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட்டோம். தற்போது பெருந்தோட்ட மக்களின் சட்ட ரீதியான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்கியுள்ளோம். ஆனாலும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பெருந்தொட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். 200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்வதற்கு பாடுபடும் அவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்றப்பட வேண்டும்.

நான் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் எனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஏ சீ எஸ் ஹமீட் தெரிவு செயற்பட்டார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விசேடமான நிலைமை பற்றி அவர் எனக்கு விளக்கம் அளித்துள்ளார். அடிக்கடி முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதனை நாம் அறிவோம். அது தொடர்பாகவும் நாம் முழு அவதானம் செலுத்துகின்றோம்.

சிங்கள சமூகமும் அவர்களுக்கென மட்டுப்படுத்தப்பட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அது பற்றியும் நாம் கவனம் செலுத்துகின்றோம். அப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான ஒரு கலந்துரையாடல் தேவைப்படுகிறது. விசேடமாக சாதி வேறுபாடுகள் காரணமாக சமூகத்தில் ஓரம் காட்டப்பட்டள்ள சமூகங்கள் தொடர்பில் முழு அவதானம் செலுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...