துருக்கியில் அடுத்தடுத்து தொடராக நிலநடுக்கங்கள் ஏற்பட காரணமென்ன?

புவியியல் வல்லுநர்களுக்ேக புரியாத மர்மம்!

துருக்கியின் கிழக்கு பகுதியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. துருக்கியில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட முக்கியமான காரணம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கி உள்ளனர்.

துருக்கி கடந்த 24 மணி நேரமாக எதிர்கொள்ளும் பேரழிவை இதுவரை உலக நாடுகள் எதிர்கொண்டதே இல்லை என்றுதான் கூற வேண்டும். மொத்த துருக்கி நாட்டையும் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் உலுக்கி போட்டுள்ளது.

கட்டடங்கள், வீதிகள், வீடுகள், விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று எல்லாம் உடைந்து, தனித்தனியாக பெயர்ந்து கிடக்கின்றன. வரிசையாக அங்கு அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் துருக்கி நாட்டையே நிர்மூலமாக்கியுள்ளன. நேற்றுமுன்தினம் அதிகாலை முதலாவது நிலநடுக்கமே மிகவும் வலிமையானதாக இருந்தது. 7.8 ரிக்டரில் அது பதிவாகி இருந்தது. அதோடு அதிகாலையில் ஏற்பட்டதால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. அதன்பின் முதல் நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. 10 மணி நேரம் கழித்து இரண்டாவது நிலநடுக்கம் மாலையில் ஏற்பட்டது.

இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது. இதுவும் மிகவும் வலிமையாக இருந்தது. இது மீட்பு பணிகளை வெகுவாக பாதித்தது. பணிகள் மொத்தமாக இதனால் முடங்கின. அதன் பின்னர் சில மணி நேரங்களில் மூன்றாவது நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த மூன்று நிலநடுக்கமும் நேற்றுமுன்தினம் 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஆகும்.

மறுநாள் 4 ஆவது முறையாக துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 36 மணி நேரத்தில் துருக்கி மீண்டும் மீண்டும் மோசமாக குலுங்கி உள்ளது.

துருக்கி நிலநடுக்கம் அதிகமாக ஏற்படக் கூடிய இடம் ஆகும். யூரேசிய தட்டு மற்றும் ஆபிரிக்க, அரேபிய தட்டுகள் எல்லாம் ஒரு இடத்தில் சந்திக்கும் பகுதிதான் துருக்கி. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இப்போது ஏற்படும் நிலநடுக்கங்கள் புதிய நிலநடுக்கமா? அல்லது நேற்று முன்தினம் ஏற்பட்டதன் தொடர் பாதிப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது புதிய நிலநடுக்கம் என்றால் புவித்தட்டுகள் புதிதாக நகர்வது. 'ஆப்டர் எபெக்ட்' என்றால் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக சில தட்டுகள் ஆட்டம் காண்பது ஆகும்.

இதில் துருக்கியில் இப்போது என்ன மாதிரியான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த நிலநடுக்கத்தை துருக்கி நாட்டு அதிகாரிகள் சிலர் புது நிலநடுக்கம் என்கிறார்கள். அதே சமயம் சிலர் ஆராய்ச்சியாளர்கள் இது தொடர் பாதிப்புகள் என்கிறார்கள்.

இதுதான் உலக மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நிலநடுக்கம் காரணமாக 3,300 இற்கும் அதிகமானோர் பலியானதாக நேற்றுவரை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை அதனை விட அதிகமென்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.


Add new comment

Or log in with...