மருத்துவர்களும் தொழிற்சங்கங்களும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம்

அரசாங்கம் மேற்கொண்டுள்ள வரி திருத்தத்திற்கு எதிராக அரசாங்க ஊழியர்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். கொழும்பு துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ள நிலையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (08 ஆம் திகதி) 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். அதேநேரம் அரசாங்கப் பல்கலைக்கழகங்களிலும் இன்று அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, 'அரசாங்க ஊழியர்கள் மீதான வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் அரச நிறுவனங்களை மூடி அனைத்து அரச ஊழியர்களும் வீதியில்இறங்குவர்' என்று அரச தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் ஜனநாயக நாடொன்றில் எந்தவொரு விடயத்தையும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறு தீர்க்க முடியாத எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறப்போவதில்லை. இது மறைக்க முடியாத உண்மையாகும்.

அவ்வாறான நடவடிக்கைகள் மக்களை நெருக்கடிகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாக்கும். நாடு கடந்த வருடம் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பலவித அழுத்தங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகியுள்ள மக்கள் அவற்றில் இருந்து இன்னும் முழுமையாக மீட்சி பெற்று விடவில்லை.

இவ்வாறான சூழலில் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதன் ஊடாக அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள வருகைதரும் வெளிநோயாளர்களும், தங்கி இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளர்களும்தான் அதிகம் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பர்.

அரசாங்கம் மேற்கொண்டுள்ள வரி சீரமைப்புக்கும் அப்பாவி மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசாங்கத்தின் வரி சீரமைப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் மக்களுக்கு சேவை வழங்குவதை அடையாள வேலைநிறுத்தம் என்ற போர்வையில் நிறுத்துவது எவ்விதத்திலும் நியாயப்படுத்தக் கூடிய விடயமல்ல.

அதேநேரம், மக்களின் வரிப்பணத்தில் கற்று மருத்துவர்களாகியுள்ளவர்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதன் ஊடாக அவர்களது கல்விக்காக வரி செலுத்திய மக்களையே நெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவே அமையும்.

இந்நாடு கடந்த வருடம் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அவ்வருடத்தின் ஏப்ரல் முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் இப்பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்திருந்தது. அதனால் மக்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றது முதல் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களின் பயனாக பொருளதார நெருக்கடியின் தீவிரநிலை தணிந்திருக்கிறது. ஆனாலும் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அழுத்தங்களும் முழுமையாக நீங்கிவிடவில்லை.

ஆன போதிலும் இந்நெருக்கடியில் இருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அந்த வகையில்தான் வரி திருத்தத்தையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவே இதுவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதென்றால் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நாட்டை மீட்டெடுப்பதற்கான வழிவகைதான் என்ன?

அந்நிய செலாவணி பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுத்திருப்பதை மறந்துவிடலாகாது. அதனால் இந்நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு நிதி வருமானம் அவசியமானது. அவ்வருமானத்தைத் திரட்டும் வழிகளில் ஒன்றாக விளங்கும் வரித்திருத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவிப்பதாயின் நாட்டின் இலவசக்கல்வி, சுகாதார சேவை மற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் அனைத்தையும் நெருக்கடிகள் இன்றி சீராக முன்னெடுப்பது சவாலுக்குரியதாகி விடும்.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் உள்ளது. இதைவிடுத்து தனித்து நின்று அரசினால் மாத்திரம் வெற்றி பெறக்கூடிய நெருக்கடி அல்ல இது. அரசாங்கத்தின் வரி திருத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அரசாங்கம் வருமானம் திரட்ட மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக விளங்கும் வரி திருத்தத்தைச் சீர்குலைக்கும் போது இந்நாட்டின் சேவை வழங்கும் துறைகள் அனைத்தும் பாதிக்கப்படும். அது நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட வழிவகுக்கும். அதனால் நாட்டினதும் மக்களினதும் நலன்களை கருத்தில் கொண்டு மருத்துவர்களும் தொழிற்சங்கங்களும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதுவே காலத்தின் அவசியத் தேவையாகும்.


Add new comment

Or log in with...