முட்டைகளுக்கான புதிய விலையுடன் வர்த்தமானி

வெள்ளை ரூ. 44; சிவப்பு ரூ. 46

முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விதித்து புதிய வர்த்தமானியொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளதாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  முட்டைக்கான கட்டுப்பட்டு விலையை விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாகக் கோரி முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த விசாரணை நேற்று இடம்பெற்றதுடன், அதன்போது நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன அதனை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அதற்கிணங்க புதிய கட்டுப்பாட்டு விலையின்படி வெள்ளை முட்டை 44 ரூபாவும், சிவப்பு முட்டை 46.00 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கை தொடர்பில் திருப்தியடைவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள மனுதாரர் தரப்பு, தமது மனுவை வாபஸ் வாங்க தயாரென்றும் தெரிவித்துள்ளது. அதன்போது மேலும் விடயங்களை முன்வைத்த மேலதிக சொலிசிட்ட ஜெனரல் கடந்த ஆகஸ்ட் மாதம் நுகர்போர் பாதுகாப்பு அதிகார சபையினால் விதிக்கப்பட்ட முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீதிமன்றம் இடைநிறுத்தியதால் முட்டை உற்பத்தியாளர்கள் 20 மில்லியனுக்கு மேற்பட்ட மேலதிக வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அதனையடுத்து மேற்படி மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் வழக்கு பணத்தின் கீழ் அந்த வேண்டுகோளுக்கு இடமளிக்குமாறும் அவர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

எவ்வாறெனினும் அந்த வேண்டுகோள் தொடர்பான விசாரணையை மார்ச் 30ம் திகதி நடத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...