தனித்துவம் மிக்க தேசியக் கொடிக்கு அனைவரும் கௌரவம் வழங்குவோம்!

சுதந்திர தினமான இன்று எமது தேசியக் கொடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த எமது தேசத்துக்கு 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் கிடைத்தது. அடிமைத்தனத்தில் இருந்து எமது தேச மக்களுக்கு விடுதலை கிடைத்தது. அன்றைய தினம் தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. எமது மக்கள் அனைவரும் தேசியக் கொடியினை, தம் வீடுகளிலும், வேலைத்தலங்களிலும், பொதுஇடங்களிலும், பாடசாலைகளிலும் பறக்கவிட்டு மரியாதை செய்கின்றனர்.

இன்று சுதந்திரதினத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கம்பீரமாக தேசியக் கொடி பறப்பதனை அவதானிக்க முடிகின்றது ஒரு நாட்டில் பெருமையை பறைசாற்றும் சின்னமாக தேசியக் கொடி மதித்து கெளரவிக்கப்படுகிறது.

தேசியக் கொடியை ஏற்றும் போதும் அதனை கம்பத்திலிருந்து இறக்கும் போதும் ஒரு நாட்டில் தலைவருக்கு கொடுக்கப்படும் அதே அளவு மரியாதை தேசிய கொடிக்கு கொடுக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் போது தேசியக் கொடி சகல அரசாங்க கட்டடங்களிலும் கம்பீரமாக பறக்கவிடப்படுகிறது.

இத்தனை சிறப்புவாய்ந்த தேசியக் கொடியானது தேசத்தில் சோகம் ஏற்படும் வேளையில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

முக்கிய நிகழ்வுகளின் போது தேசியக் கொடியை பயன்படுத்திய பின்னர் அவற்றை மிகவும் பாதுகாப்பாக இறக்கி நெறியாக மடித்து வைக்க வேண்டும். அடுத்த தேசிய நிகழ்வுகள் நடைபெறும் தினத்தில் அல்லது முக்கிய நிகழ்வுகளில் மாத்திரம் கம்பங்களில் பறக்க விட வேண்டும்.

தேசியக் கொடியை தலைகீழாக கவனக்குறைவின் நிமித்தம் கட்டுவது மன்னிக்க முடியாத குற்றம் மட்டுமல்ல, இலங்கை சட்டப்படி ஒரு தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது.

தேசியக் கொடியை பறக்கவிடும் போது அதன் ஒரு பகுதி தரையில் படுவதையோ வேறு ஏதாவது ஒரு பொருளின் மீது விழுவதையோ தடுக்க வேண்டும். இவ்விதம் தேசியக் கொடியை கட்டுவதும் ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

அது போல் தேசியக் கொடிகளை அச்சிடும் போது அச்சகங்கள் அதன் இயற்கையான வர்ணங்களை மாற்றிவிடாமலும் அவதானமாக இருக்க வேண்டும். தேசியக் கொடியை பாதைகளின் வீதியின் குறுக்கே கட்டுவதும் அதனை அவமதிக்கும் செயலாக கருதப்படும்.

நாட்டின் சுதந்திரத்தின் சின்னமாக விளங்கும் தேசியக் கொடியை கெளரவிக்கக் கூடிய நற்பண்புகளை பாடசாலைகளில் அறிவுறுத்துவதற்கான திட்டங்களை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

தேசிய கீதம் இசைக்கப்படும் போது நாம்அனைவரும் எழுந்து நின்று சிரம் தாழ்த்தி அதற்கு மாரியாதை செலுத்துவதைப் போன்று, தேசியக் கொடி கட்டடங்களில் ஆடம்பரமாக பறந்து கொண்டிருக்கும் போது அதனை அண்ணாந்து பார்த்து சிரம் தாழ்த்தி கெளரவித்தல் அவசியமாகும்.

75 ஆவது சுதந்திரதினமான இன்று நாட்டிலுள்ள எல்லா வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்கவிடுதல் அவசியமாகும். இதன்முலமே இந் நாட்டு மக்கள் தற்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறார்கள் என்பதையும் எங்கள் நாட்டில் வலுவடைந்து வரும் தேசிய ஐக்கியத்தையும் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கும்.

நடராஜன் ஹரன்


Add new comment

Or log in with...