அவுஸ்திரேலியாவின் புதிய ஐந்து டொலர் நாணயம், பிரிட்டிஷ் மன்னரின் படத்திற்கு பதில் பழங்குடியினரை கெளரவப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் முதல் குடிமக்களது வரலாறு மற்றும் காலாசாரத்தை குறிக்கும் வகையில் நாணயத் தாள் வடிவமைக்கப்படுவதாக அவுஸ்திரேலிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத் தாளின் மறு பக்கத்தில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் படம் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
இந்த ஐந்து டொலர் நாணயத்தில் காலஞ்சென்ற பிரிட்டிஷ் மகாராணி இரண்டாவது எலிசபெத் படமே இடம்பெற்று வந்தது. எனினும் புதிய நாணயத்தாளில் மன்னர் சார்ல்ஸின் படத்தை இணைக்கமால் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவுஸ்திரேலியாவின் எந்த ஒரு நாணயத்தாளிலும் பிரிட்டிஷ் மன்னர்கள் படம் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அரச தலைவராக பிரிட்டிஷ் மன்னர் இருந்தபோதும் அது ஒரு பெயரளவில் சம்பிரதாயமான பதவியாகவே உள்ளது. இந்நிலையில் எலிசபெத் மகாராணி கடந்த செப்டெம்பர் மாதம் மரணித்த பின்னர் அவுஸ்திரேலியா ஒரு குடியரசாக மாறும் விவாதம் வலுத்து வருகிறது.
Add new comment