ரஷ்யா மற்றொரு பாரிய தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாகவும் அது பெப்ரவரி 24 அளவில் விரைவாக இடம்பெறக் கூடும் என்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோ எச்சரித்துள்ளார்.
ரஷ்யா ஆயிரக்கணக்கான துருப்புகளை குவித்து வருவதோடு கடந்த ஆண்டு படையெடுப்பை ஆரம்பித்த ஓர் ஆண்டு நிறைவை ஒட்டி ஏதோ செய்ய முயற்சிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் ஒன்றுக்காக ரஷ்யா சுமார் 500,000 துருப்புகளை திரட்டி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு சுமார் 300,000 துருப்புகளை குவிக்கும் அறிவிப்பை ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த செப்டெம்பரில் வெளியிட்டிருந்தார். எனினும் இதன் உண்மையான எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் மிக அதிகம் என்று ரெஸ்னிகோ குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் உத்தியோகபூர்வமாக 300,000 என அறிவித்தபோதும் எமது மதிப்பீட்டின்படி எல்லைகளில் நாம் பார்க்கும் துருப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது” என்று பிரெஞ்ச் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு டொன்பஸ் பிராந்தியத்தை கைப்பற்றியதாக அண்மையில் குறிப்பிட்ட ரஷ்யா, பக்முத் நகரை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு போர் டாங்கிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இணங்கிய நிலையில் போர் விமானங்களை தரும்படி அந்த நாடு உதவி கோரியுள்ளது.
“ரஷ்ய பயங்கரவாதிகளை நிறுத்துவதற்கான ஒரே வழி அவர்களை தோற்கடிப்பது மாத்திரம் தான்” என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
Add new comment