ரஜப் மாதத்தின் சிறப்பு

நிச்சயமாக அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்து கொள்ளாதீர்கள். இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

(அல் குர்ஆன்)

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'காலம் அதன் சுழற்சிக் கேற்ப சுழன்று கொண்டே இருக்கின்றது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானது. மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை. துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகும். ரஜப் முழர் என்பது ஜூமாதுஸ்ஸானி, ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்.

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

நான்கு மாதங்கள் புனிதமானது என்பதும், அவை, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகியவையும் மேற்குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து தெளிவாகின்றது. அதனால் இம் மாதங்கள் போர் புரிவதற்கு தடை செய்யப்பட்ட மாதங்களாக உள்ளன. இம் மாதங்கள் புனிதமானவை என்பது உறுதியாகின்றது.

முஜீபதுல் பாஹிலிய்யா என்பவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து விட்டுச் சென்றார்கள். அதன் பின் ஒரு வருடம் கழித்து மறுபடியும் வந்த போது அவரது நிலை மாறியிருந்தது. நபிகளாரிடம் என்னை நீங்கள் அறிய மாட்டீர்களா? அதற்கு நபியவர்கள் நீங்கள் யார்? நான் தான் அல் பாஹிலி சென்ற வருடம் வந்து சந்தித்துவிட்டு சென்றேன். நீர் ஏன் இந்த அளவு மாறிப் போயிருக்கிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கேட்டார்கள். அதற்கு அவர் நான் உங்களை பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மாத்திரம் தான் உண்ணக் கூடியவனாக இருந்தேன். அதற்கு நபியவர்கள் எதற்காக நீர் உம்மை வருத்திக் கொள்கிறீர்? பொறுமையுடைய மாதத்தில் மாத்திரம் நோன்பு வைப்பதுடன் ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பை வையுங்கள்.

அதற்கு அவர், இன்னும் அதிகப்படுத்துங்கள். எனது உடலில் வலிமை இருக்கின்றது என்று கேட்டுக் கொண்ட போது, ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்புகள் வைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர் மீண்டும் கேட்டுக் கொண்ட போது ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைக்குமாறு கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட போது புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள், விடுங்கள் புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள், விடுங்கள். புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள், விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தனது மூன்று விரல்களையும் இணைத்து பிரித்துக் காட்டினார்கள்.

(ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)

இந்த ஹதீஸிலிருந்து புனிதமான மாதங்களில் நோன்பு வைக்க முடியுமென்பது தெளிவாகின்றது.

'நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது. அதன் தண்ணீர் பாலை விட வெண்மையானது. அதன் சுவை தேனை விட இனிமையானது. எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்கு அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான். (நூல்: பைஹகி)

மேலும் நபி (ஸல்) அவர்கள், ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹூம்மா பாரிக் லனா பீரஜப வஷஃபான வபாரிக் லான பீரமழான்'. யா அல்லாஹ் ரஜபிலும் ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வானாக. இன்னும் (ரமழான் மாதத்தை அடைந்து) அதிலும் பரக்கத் செய்வானாக' என பிரார்த்திப்பார்கள். (நூல்: அஹ்மத்)

இஸ்லாமிய மாதங்கள் வரிசையில் ரஜப் மாதம் ஏழாவது மாதமாகும். ரஜப் என்பது பொழிதல் எனப் பொருள்படும். அல்லாஹ்வின் ரஹ்மத் இந்த மாதத்தில்தான் தொடர்ந்து பொழிகிறது. ரஜப் மாதம் மாண்புடைய மாதமாகும். ரஜப் மாதம் உம்மத்திக்குரிய மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அறியாமைக் காலத்திலும் அரேபியர்கள் இம்மாதத்தை புனிதமாக கருதி உம்ரா செய்யவும் குர்பானி கொடுக்கவும் செய்தார்கள். இம் மாதத்தில் சண்டையிடுவதையும் பாவம் என்று கருதினார்கள். இம் மாதத்தில்தான் நபிகளார் அவர்கள் குறைஷிகளின் கொடுமை தாங்க முடியாமல் 15 முஸ்லிம்களை உஸ்மான் (ரழி) அவர்களுடன் நஜ்ஜாஷி மன்னர் ஆட்சி செய்த அபீஷினியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

நபிகளாரின் தாயாரான அன்னை ஆமினா அவர்கள் நபி (ஸல்) அவர்களை கருத்தறித்ததும் ரஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தான் என சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதேநேரம் நபி (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரை மேற்கொண்டதும் ரஜப் பிறை 27 இல் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். ரஜப் மாதத்தின் நான்காவது பிறை எத்தினத்தில் வருகின்றதோ அதே தினத்தில் புனித ரமழான் மாத பிறை பிறக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மையாகும்.

நபி (ஸல்) அவர்கள் புனித ரமழான் மாத பர்ளான நோன்பை நோற்க பயிற்சியாக அதற்கு முன்புள்ள மாதமாகிய ரஜப், ஷஃபான் மாதங்களில் அதிகமாக நோன்பு நோற்பவராக இருந்துள்ளார்கள். ரஜப் மாத மாண்புகளை அறிந்து அதன் படி ஒழுக எல்லாம் வல்ல நாயன் துணை புரியட்டும்.

மௌலவி

எம்.யூ.எம்.வாலிஹ்...

(அல் அஸ்ஹரி) வெலிகம.


Add new comment

Or log in with...