தேசத்தை சார்ந்திருத்தல் ஒரு இஸ்லாமிய நோக்கு

ஒரு மனிதன் தான் பிறந்த தேசத்தையும் மண்ணையும் நேசிப்பது அவனிடம் உள்ள ஒரு இயற்கை உணர்வாகும். மனித இயல்புகளை எப்போதும் மதிக்கும் இஸ்லாம், தான் பிறந்த தேசத்தையும், தான் பிறந்த மண்ணையும் நேசிப்பதையும், அதனை சார்ந்து நிற்பதையும் இஸ்லாம் ஓர் உன்னதமான விழுமியமாகவே அடையாளப்படுத்தி இருக்கின்றது. ஒரு சராசரி மனிதன் இந்த உயர்ந்த மனோ நிலையில் இருந்து எச்சந்தர்ப்பத்திலும் விதிவிலக்காக செயல்பட முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போது மக்காவின் எல்லைப் பகுதியில் நின்று கொண்டு அந்த மக்கமா நகரைப் பார்த்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

'மக்காவே நீ உலகிலேயே எனக்கு மிகவும் விருப்பமான பூமி. அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான தேசம். உன் சமூகம் என்னை விரட்டி இருக்காவிட்டால் நான் உன்னை விட்டு சென்றிருக்க மாட்டேன்.' (ஆதாரம் - முஸ்னத் அபூ யஃலா)

நபி (ஸல்) அவர்களின் மேற்சொன்ன வார்த்தையானது, அன்னாரது ஆழ் மனதில் புதைந்திருக்கின்ற தனது தேசத்திற்கான நேசத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. இந்தத் தேசத்தின் பிரிவை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதையும், நிர்ப்பந்தமாகவே இதனை விட்டும் நான் வெளியாகிச் செல்கின்றேன் என்பதனையும் சூசகமாக அன்னார் சொல்லி இருக்கிறார்கள்.

மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பிற்பாடு, தான் பிறந்து வளர்ந்த தேசத்தை எண்ணி அன்னார் பல சந்தர்ப்பங்களில் கவலை பட்டிருக்கிறார்கள். அந்த மக்கமா நகரின் நினைவலைகளில் இருந்து மீண்டு, தான் குடி பெயர்ந்திருக்கின்ற மதீனமா நகர் சூழலை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோநிலையை இறைவன் வழங்க வேண்டும் எனவும் பின்வருமாறு பிராத்தனை செய்துள்ளார்கள்.

'யா அல்லாஹ் நீ எங்களுக்கு மக்காவை நேசத்திற்குரிய பூமியாக மாற்றியது போன்று மதீனாவையும் மாற்றித் தருவாயாக அல்லது மக்காவை விட நேசத்திற்குரிய பூமியாக மதீனாவை மாற்றித் தருவாயாக'. (ஆதாரம் - புஹாரி)

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தேசப்பற்றும், தேசிய உணர்வும் பல்வேறு வகையான சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அண்ணலார் (ஸல்) அவர்கள் மதீனாவை விட்டு வெளியே சென்று மீண்டும் திரும்பி வரும்போது மதீனா நகர் மீதுள்ள பற்றின் காரணமாக தமது வாகனத்தை வேகமாக ஓட்டி வரக்கூடியவராக இருந்துள்ளார்கள். (ஆதாரம் - புஹாரி)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற சில நாட்களின் பின் உசேல் அல் கிஃபாரி (ரழி) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வந்த போது அவரிடம் மக்கமாநகரம் எப்படி இருக்கின்றது என கேட்டார்கள், அதற்கவர் புனித மக்காவின் பசுமைகளையும், மழை பொழிந்து வெள்ளம் பாய்ந்து ஓடிய பள்ளத்தாக்குகளையும், செழிப்பாக வளர்ந்துள்ள மக்காச் செடிகளையும் வர்ணிக்க ஆரம்பித்த போது, நபி (ஸல்) அவர்கள், 'போதும்... போதும்... மீண்டும் அந்த மக்கா பற்றி கூறி எமது உள்ளங்களை கவலையில் ஆழ்த்திட வேண்டாம்' என்று கூறினார்கள்.

(ஆதாரம் - இப்னு அபிதுன்யா)

அதேநேரம், ஒரு மனிதனை தனது தேசத்திலிருந்து வெளியேற்றி விடுவதை மிகப் பெரும் பாவமாக இஸ்லாம் கருதுகின்றது. ஒரு மனிதனை கொலை செய்வதற்கு நிகரான குற்றமாக அதனை அல் குர்ஆன் அடையாளப்படுத்தி இருக்கின்றது. பனு இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களுக்கு கட்டுப்படாமல் நடந்து கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்கு இரு அம்சங்களை பரிந்துரை செய்தான். ஒன்று நீங்கள் உங்களை கொலை செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களது தேசத்திலிருந்து வெளியேறிச் சென்று விடுங்கள். (அல் குர்ஆன் - நிசா:66 )

ஒரு சமூகம் தனது தேசத்தின் சுதந்திரத்திற்காக அல்லது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அச்சமூகம் தொடர்ந்தும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக இஸ்லாம் கருதுகிறது, அவ்வாறே யார் யாரெல்லாம் தனது நாட்டின் விடுதலைக்காகவும் எழுச்சிக்காகவும் தனித்துவத்திற்காகவும் போராடாமல் இருக்கிறார்களோ அவர்கள் இறந்த பிணங்களுக்கு சமமானவர்கள் என்ற கருத்தை நவீன சிந்தனையாளர் கலாநிதி முஹம்மது இமாரா தெரிவித்திருக்கிறார்.

வரலாற்றில் இஸ்லாமிய எழுச்சிக்காகப் போராடிய வரலாற்று நாயகர்கள் அனைவரும் தனது தேசத்தைச் சார்ந்தே பயணித்திருக்கிறார்கள். தேசத்தைக் கட்டி எழுப்புதல் என்ற சிந்தனையின் ஆரம்ப கர்த்தாக்கள் இஸ்லாமிய சிந்தனையாளர்களே என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தேசப்பற்றும் தேசிய உணர்வும் இருப்பதால்தான் நாடுகள் பலமாகின்றன. மேலும் அவைகள் செழிப்புறுகின்றன என உமர் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்று எங்களது இலங்கை தேசம் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு மிக மோசமான பொருளாதாரப் பிடியில் சிக்கி திணறிக் கொண்டிருக்கின்றது. அற்புதமான பல்வேறு வகையான வளங்களை உள்ளடக்கி இருக்கின்ற எங்களது தேசத்தின் இன்றைய நிலை ஒவ்வொரு இலங்கை குடிமகனையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.

எனவே இந்த இனிய தேசத்தை மீட்டெடுப்பதற்கான காத்திரமான பங்களிப்புகளை ஓர் இலங்கையனாகவும் இஸ்லாமியனாகவும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அந்த வகையில் கீழ் கூறப்படும் விவகாரங்களில் நாம் கவனம் செலுத்தி எங்களது பங்களிப்பை செய்ய முடியும்.

1-. தேச ஒருமைப்பாடு, நாட்டின் ஸ்திரத்தன்மை, அதன் பாதுகாப்பு, அதன் இறைமைக்கு பங்கம் விளைவிக்காமல் இருத்தல் போன்ற விடயங்களில் முனைப்பாக செயல்படுதல்.

2. - நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய செயற்திட்டங்களை வகுத்து செயல்படுவதுடன் இதற்காக அரசுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குதல்.

3-. நாட்டின் அந்நிய செலாவணியை மேம்படுத்துவதற்காக வகுக்கப்பட்டிருக்கின்ற முறையான திட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பை நல்குதல்.

4. -இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த தேசத்திற்கு மேலும் நெருக்கடிகளை தோற்றுவிக்கும் வகையில் செயல்படாமல் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடத்தல்.

இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தி தேசத்தை சார்ந்திருக்கும் வகையில் சிந்தித்து செயற்பட வேண்டும். அதற்கு இந்த 75 ஆவது சுதந்திர தினக் காலப்பகுதி சிறந்த களமாகும்.

 

கலாநிதி அல் ஹாபிழ் எம்.ஐ.எம். சித்தீக்...

(அல் – ஈன்ஆமி) B.A.Hons, (Al- Azhar university, Egypt) M.A.& PhD (International Islamic university, Malaysia)


Add new comment

Or log in with...