மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம். ட்ரோன் என்றால் (Unmanned aerial vehicle) ஆளில்லா பறக்கும் வாகனம் என்று பொருள்.
தொழில்நுட்பத்தின் பரிணாமம் குறைந்த முயற்சியுடன் எவரும் தங்கள் பணிகளை செய்யக்கூடிய ஒரு சகாப்தத்திற்கு வழிவகுத்துள்ளது. உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்களில் ட்ரோன் தொழில்நுட்பம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில் இது தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரையும் கவரக்கூடிய விளைவாகும். ட்ரோன்கள் தரையில் இருந்து விமானிகளால் கட்டுப்படுத்தப்படும் அல்லது முன்திட்டமிட்ட பணியை மேற்கொள்ளும். ட்ரோன் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல துறைகளிலும் பயனளிக்கும் வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
பல்வேறு நேர்மறையான அம்சங்கள் இருந்த போதிலும், ட்ரோன்களின் ஏராளமான திறன்கள் மக்களின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைகின்றன. தொழில்நுட்பத்தின் நிரந்தர வளர்ச்சியின் காரணமாக எதிர்காலத்தில் ட்ரோன்கள் இன்னும் கவர்ச்சிகரமான திறன்களுடன் உருவாக்கப்படலாம்.
முக்கியமாக உலகில் பாதுகாப்புப் பயன்பாட்டில் ட்ரோன் கமராவின் பங்கு அதிகமாகும். பொலிஸாரும் இராணுவத்தினரும் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ட்ரோன் கமராவை பயன்படுத்துகின்றார்கள். ட்ரோன்கள் பல வகைகளில் கிடைக்கின்றன. பறக்கும் நேரம், பறக்கும் தூரம், கமராவின் தரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது.
குறிப்பாக பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் அதிக நேரம், நீண்ட தூரம் பறக்கக் கூடியவையாக உள்ளன. ஆட்கள் நுழைய முடியாத மலைப்பகுதிகள், காட்டுப் பகுதிகள் என இக்கட்டான நிலப்பரப்பில் எல்லாம் ட்ரோன் 'மூன்றாவது கண்' போன்று பறக்கின்றது. நேரடியாக நாம் இருக்கும் இடத்திலிருந்து, வானில் இருந்து பார்க்கும் வசதியை கொடுப்பதால் ட்ரோன் கமரா என்பது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகவே கருதப்படுகிறது.
பத்தாயிரம் ரூபா தொடக்கம் பல இலட்சம் ரூபா வரையிலான ட்ரோன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை பலரும் வாங்கி தங்களுக்குப் பிடித்த ஊர்களை இதுவரை பார்த்திராத கோணத்தில் படம் எடுத்து ரசிக்கின்றனர். திருமணங்கள், சுற்றுலா, திரைப்படக் காட்சிகள், திருவிழாக்கள், பேரிடர்கள், போராட்டங்கள், பாதுகாப்பு என பலவற்றுக்கும் பயன்படும் ட்ரோன் கமரா கழுகுப் பார்வையில் நம் கண்களுக்கு புதிய கோணத்தில் காட்சிகளை வழங்குகின்றது.
விவசாயத்திற்காக இந்தியா போன்ற நாடுகள் தற்போது ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகின்றன. அண்மையில் இந்தியாவின் இளைஞர்நல மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் "ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ட்ரோன் பைலட்டுகளை தயார்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையிலும் கொரோனா காலகட்டத்தில் ட்ரோன் கமெராக்கள் மூலம் பொலிஸார், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். எதிர்காலத்தில் இதன் மூலம் விவசாய நடவடிக்கைகளை மாத்திரமல்ல உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் விநியோகம் போன்றவற்றிற்கும் இவற்றைப் பயன்படுத்தலாம்.
நாம் எதிர்வரும் காலங்களில் ட்ரோனை வாடகைக்குப் பெறக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ட்ரோன் உற்பத்திக் கைத்தொழில், பழுதுபார்த்தல், அதற்கான பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் என பல வேலைவாய்ப்புகள் உருவாகும் சாத்தியமும் உள்ளது.
இலங்கையில் ஆளில்லா விமானத்தை பயன்படுத்த விரும்பினால் அதற்கான அனுமதியை பெற வேண்டும். அனைத்து ட்ரோன் கமராக்களும் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். திட்டமிடப்பட்ட அனைத்து பறக்கும் இடங்களிலும் அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ட்ரோன் சாதனங்கள் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதனால் தற்போது வெகுவாக பிரபல்யம் அடைந்து வருகின்றன. இதன் காரணமாக எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளடக்கி இந்த பறக்கும் சாதனங்கள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
வீ.ஆர். வயலட்...
Add new comment