கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை வரும் வரை இலங்கை கிரிக்கெட் மீது நடவடிக்கை எடுக்கப்படாது

- விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு உறுதியளிப்பு

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கட் நிறுவனம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயற்குழுவினரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்றையதினம் (01) எடுத்துக் கொள்ளப்பட்ட போது அமைச்சர் குறித்த உறுதிமொழியை வழங்கினார்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ரி20 உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்த முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இரத்து செய்யும் உத்தரவை தடுக்கும் வகையில் விளையாட்டு அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வுத்தரவாதத்தை அமைச்சர் இதனை உறுதியளித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் விரிவான கணக்காய்வுக்கு பரிந்துரை செய்துள்ள குறித்த விசாரணைக் குழு, சாட்சியங்கள் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கிரிக்கெட் நிறுவன ஆவணங்களை கையகப்படுத்துமாறு விளையாட்டு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.


Add new comment

Or log in with...