இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவை விளம்பரம் மூலம் தெரிவு செய்ய முடிவு

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு பத்திரிகையில் விளம்பரம் செய்ய தேசிய தெரிவுக் குழு, விளையாட்டு அமைச்சு மற்றும் தேசிய விளையாட்டு சபைக்கு இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவை நியமிக்கும்போது வெளிப்படைத் தன்மையுடனான முறை ஒன்றை செயற்படுத்துவதற்கும் குழுவுக்கு எந்த ஒரு முன்னாள் வீரருக்கும் விண்ணப்பிக்க அனுமதிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (30) இடம்பெற்ற அவசரக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவுக்காக 10 பேர் கொண்ட அபேட்சகர் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை விளையாட்டு அமைச்சுக்கு ஒப்புதலுக்கு அனுப்பியபோதும் தேசிய தெரிவுக் குழு அதற்கு அனுமதி அளிக்க மறுத்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தெரிவுக் குழுவுக்கு விண்ணப்பிக்க முன்னாள் வீரர்களுக்கு தகுதி உள்ளது என்பதை நாம் விரைவில் பொதுவெளியில் அறிவிக்கவிருப்பதோடு அதற்கமைய விளையாட்டு ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அமைச்சர் வெளியிடுவார் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மஹேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் தேர்வாளர்கள் பெயரிடப்பட்டு, அதற்கு நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் ஒப்புதலுக்கு விளையாட்டு அமைச்சுக்கு அனுப்பப்படுவதே வழக்கமான நடைமுறை என்று கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒன்று கிடைக்கும் வரை தெரிவுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடப்போவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் கருத்துக் கூறும்போது தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...