தொழிற்சங்க தலைவர்களுடனான கலந்துரையாடலில் 2 கோரிக்கைகளை முன்வைத்த செந்தில்

- இக்கட்டான காலத்தில் தேசத்தை கட்டியெழுப்ப இ.தொ.கா. எப்போதும் உதவும்

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இலங்கையில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் நேற்று (30) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இ.தொ.கா சார்பாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக்கொண்டார்.

இதன் போது பிரதமரிடம் செந்தில் தொண்டமான் இரண்டு கோரிக்கைகளை இ.தொ.கா சார்பாக முன்வைத்தார்.

1. குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் அரச உத்தியோகஸ்தர்களுக்கும் வரி அதிகரிப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இ.தொ.கா சார்பாக முன்மொழிந்தார். ஒரு அரசாங்கத்தை நடத்த வரி என்பது அவசியம். ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பணவீக்கம் அதிகரித்து டொலரின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. எனவே அந்நியசெலவானியை ஈட்டுக்கொடுக்கும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு வரி அதிகாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் எனவும் தெரிவித்தார்.
(ஏழைகளிடம் முற்றிலும் வரியை தவிர்த்து, செல்வந்தர்களிடம் இரட்டிப்பு வரி கொண்டு வர வேண்டும்)

2. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 நாள் சம்பளம் அவர்களின் முழுமையான ஒரு நாள் உணவுக்கு போதுமானதல்ல. தேயிலை மற்றும் றப்பர் ஏற்றுமதி சார்ந்த தொழிலாக இருப்பதால் அந்நியசெலவானி ஊடாக இரட்டிப்பு இலாபம் ஈட்டிக்கொடுக்கிறது.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக டாலர் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இதனூடாக பெருந்தோட்ட நிறுவன உரிமையாளர்கள் இரட்டிப்பு இலாபம் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளமும் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலுவான கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இக்கட்டான காலங்களில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இ.தொ.கா.என்றுமே முன் நின்று செயற்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் அதுவே தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...