அஹிம்சையை உலகுக்கு போதித்த காந்தி அடிகள்; 75ஆவது நினைவு தினம் இன்று

இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

"என் வாழ்க்கையே எனது செய்தி" என்று கூறியுள்ளார் காந்தி. அதுபோல் வரலாற்றில் உயர்ந்த தியாக வாழ்க்கையை காந்தியடிகள் வாழ்ந்துள்ளார். அவர் கொண்ட கொள்கையின் உறுதியும், விடாப்பிடியான அறப்போராட்டமுமே இன்று மானுடம் பேசும் கதைகளாகும்.

இந்திய தேசத்தின் தந்தை- காந்தி உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். உண்மை, அகிம்சை, எளிமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு உயர்ந்த வாழ்வை அவர் வாழ்ந்தார். அதே சமயம் பணிவான ஆளுமை, அபரிமிதமான மனக்கட்டுப்பாடு, தனக்குள் ஒரு புரட்சி, பொறுமை ஆகியவற்றின் பிறப்பாக காந்திஜி திகழ்கிறார்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, குஜராத் பகுதியின் போர்பந்தரில் ஒக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார். அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி போர்பந்தர் பகுதியின் தலைமை அமைச்சராக இருந்தவர். காந்தி, அவரது வீட்டில் இறுதியாகப் பிறந்த குழந்தை. அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது, காந்தி தன் சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட, கஸ்தூரிபாயை மணந்துகொண்டார்.

மோகன்தாஸ் காந்தியின் 16 ஆவது வயதில், அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார். தனது 19 ஆ-வது வயதில் கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணம் செய்தார் காந்தி. காந்தி முதன்முதலாகப் பகவத் கீதை புத்தகத்தைப் படித்தபோது, அவருக்கு வயது 20. பகவத் கீதை காந்தியின் மனதை ஈர்த்த புத்தகங்களுள் முதன்மையானது. இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார்.

பம்பாய் (மும்பை) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முயன்று, சிறிது காலம் சட்ட வரைவாளராகப் பணியாற்றினார். 1893- ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தென்னாபிரிக்காவுக்குப் பயணம் செய்தார் காந்தி. ரயில் பயணத்தின்போது, நிறம் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார். தென்னாபிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, நாட்டல் பகுதியில் இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார். தென்னாபிரிக்காவின் நாட்டல் பகுதியின் உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்த முதல் இந்திய வழக்கறிஞர் காந்திதான்.

தென்னாபிரிக்காவாழ் இந்தியர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார். தென்னாபிரிக்காவாழ் இந்தியர்களின் வாழ்விடங்கள், வர்த்தகம் ஆகியவற்றை மறுக்கும் சட்டங்களை எதிர்த்தார்.

1902- ஆம் ஆண்டு, மீண்டும் இந்தியா திரும்பிய காந்தி சில நாட்கள் கல்கத்தாவில் (கொல்கத்தா) தங்கினார். பிறகு, பம்பாய்(மும்பை) நீதிமன்றத்தில் வழக்காடுவதைத் தொடங்கினார். எனினும், தென்னாபிரிக்காவில் அவர் தொடங்கிய பணி அவரை மீண்டும் அழைத்தது.

1921- ஆம் ஆண்டு, இந்தியா முழுவதும் பயணித்து காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கவும், திலக் விடுதலை நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி பெறுவதற்கும், நாடு முழுவதும் 20 இலட்சம் ராட்டைகள் பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.

1930- ஆம் ஆண்டு, உப்பு மீது வரி விதிக்கப்பட்டது. அதனைக் கண்டித்து, வரியை நீக்க கோரினார். மார்ச் 12, 1930 அன்று, குஜராத் அகமதாபாத்திலிருந்து, தண்டி வரை 78 சத்தியாக்கிரகிகளுடன் நடைப்பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 6 அன்று, பொதுமக்களுக்கு உப்பு விநியோகித்துப் போராட்டம் நடத்தினார்.

ஓகஸ்ட் 14, 1947 அன்று, பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் பெறுவது மகிழ்ச்சி என்றபோதிலும், பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது சோகமளிக்கிறது எனக் கூறினார். அதேநாளில், பாகிஸ்தான் தனிநாடாக உருவானது.

ஓகஸ்ட் 15, 1947 அன்று, கல்கத்தாவில் நிலவிய மத ஒற்றுமையைக் கண்ட காந்தி, மிகவும் மகிழ்ந்து அதனை மிகப்பெரிய அதிசயம் என வர்ணித்தார். ஜனவரி 30, 1948 அன்று, மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காந்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நாதுராம் கோட்சே கையில் இருந்த துப்பாக்கியில் வெடித்த மூன்று தோட்டாக்கள் காந்தி உடலில் பாய்ந்தன.

'ஹேராம்!' என்ற முழக்கத்தோடு, சரிந்து விழுந்து இறந்தார். பெப்ரவரி 12, 1948 அன்று, காந்தியின் உடல் யமுனை நதிக்கரையோரத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது சாம்பல் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது. அகா கானின் அரண்மனையில் இன்றும் காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது கொள்கைகள் உலகளவில் பின்பற்றப்பட்டு, 'சரியான வழியில் வாழ்வது' ('living the right way’) என்ற பாடப்புத்தகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

அஹிம்சையைப் போதித்த மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவது உலக மக்களின் கடமையாகும்.


Add new comment

Or log in with...