கடனற்ற பொருளாதாரத்தை அடைந்து கொள்வதற்கான வழி

இலங்கையானது சுதந்திரத்தின் பின்னர் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு கடந்த ஆண்டில் முகம் கொடுத்தது. அந்நெருக்கடியானது அவ்வாண்டின் ஏப்ரல் முதல் ஜுலை வரை தீவிர நிலைவரை வளர்ச்சி அடைந்திருந்தது.

இதன் விளைவாக நாடும் மக்களும் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. குறிப்பாக எரிவாயு, எரிபொருள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருந்தது. அதனால் வீதிகளில் வாகனப் போக்குவரத்து பெரும்பாலும் ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது.

அத்தோடு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களதும் விலைகள் பெரிதும் அதிகரித்தன. இந்நிலையில் இந்நாடு முகம்கொடுத்திருந்த பொருளாதார நெருக்கடி உலகின் அவதானத்தையும் இங்கு திருப்பி விட்டது. அத்தோடு நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது என்று கூறப்படும் அளவுக்கு இப்பொருளாதார நெருக்கடி வளர்ச்சி பெற்றது.

இவ்வாறான சூழலில் நாட்டின் ஜனாதிபதி பதவியை, 2022 ஜுலைப் பிற்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க ஏற்றார். அதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை விரிவான அடிப்படையில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கலானார். அதன் பயனாக 2022 மே முதல் ஜுலை வரை நிலவிய தீவிர பொருளாதார நெருக்கடி கட்டம் கட்டமாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன் பிரதிபலன்கள் மக்களை சென்றடையவும் ஆரம்பமாகின.

என்றாலும் முன்னொரு போதும் இல்லாத வகையில் இப்பொருளாதார நெருக்கடிக்கு நாடு ஏன் முகம் கொடுத்தது? அதற்குத் துணைபுரிந்த காரணிகள் யாவை? என்றவாறான கேள்விகள் பரவலாக நிலவுகின்றன.

இந்த நிலையில், அனுராதபுரம் புதிய அடமஸ்தானாதிபதி சியமோபாலி மகா நிகாய மல்வத்து பீட கண்டி வலய பிரதம சங்கநாயக்க தேரர் பல்லேகம ஹேமரதன அவர்களுக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கையளிக்கும் வைபவம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதி மஹா விகாரையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தைக் கையளித்ததோடு நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடிக்கான காரணிகளையும் அதற்கு துணைபுரிந்த விடயங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.

அதாவது 2019 இல் இந்நாட்டில் 15 இலட்சம் வருமானவரிக் கோப்புகள் காணப்பட்டன. அத்தோடு பெறுமதி சேர்க்கப்பட்ட வரி(வற்), தேசத்தைக் கட்டியெழுபபும் வரி ஆகியவற்றை செலுத்துபவர்கள் தொடர்பில் ஒரு இலட்சத்து 24 ஆயிரம் கோப்புகள் இருந்தன. ஆனால் 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் 10 வரிகள் நீக்கப்பட்டதோடு வற் வரி உள்ளிட்ட 05 வரிகள் சலுகைகள் அளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டன.

அதனால் 15 இலட்சமாகக் காணப்பட்ட வரி செலுத்துபவர்களின் கோப்புகள் 04 இலட்சமாகக் குறைவடைந்ததோடு, ஏனைய வரி செலுத்தும் ஒரு இலட்சத்து 24 ஆயிரம் கோப்புகள் 9,976 ஆக குறைவடைந்தது.

இதன் விளைவாக 2019 வரை இந்நாடு பெற்றுவந்த வரி வருமானம் பாரிய வீழ்ச்சி கண்டது. அது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பெரிதும் பங்களித்தது. இந்நிலையைச் சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் 2023 ஜனவரி 25 ஆம் திகதி 145 பில்லியன் ரூபாவையே இந்நாடு வருமானமாகப் பெற்றுள்ளது. ஆனால் இம்மாதத்தின் மொத்த மூலதனச் செலவினங்கள் 498 பில்லியன் ரூபாவாகும். அவற்றில் அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து மூலதன செலவீனங்கள் 143 பில்லியன்களாகும்.

இந்த நிலைமையில் இருந்து நாடு மீட்டெடுப்பட வேண்டும். இது மிகவும் அவசியமான தேவையாகும். இந்நிலையில் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, 'எவருக்கும் தலைசாய்க்காமல் கௌரவமாக வாழக்கூடிய கடனற்ற பொருளாதாரத்தைக் கட்டி​யெழுப்புவதே எனது நோக்கம். அந்த வகையில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிவாரணமாக மேலதிக கொடுப்பனவொன்றை வழங்க எதிர்பார்ப்பதோடு 2024 முதல் நாட்டின் பொருளாதாரம் சாதகமான நிலையை நோக்கி நகர்த்தப்படும்' என்றுள்ளார்.

ஆகவே நாட்டின் பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதன் ஊடாக எவருக்கும் தலைசாய்க்காமல் கௌரவமாக வாழக்கூடிய கடனற்ற பொருளாதாரத்தை அடைந்து கொள்ள முடியும். அத்தோடு கடந்த ஆண்டில் போன்ற பொருளாதார நெருக்கடிக்கு மீண்டும் முகம்கொடுப்பதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.


Add new comment

Or log in with...