எகிப்தில் 4,300 ஆண்டுகள் பழைய மம்மி கண்டுபிடிப்பு

எகிப்தில் 4,300 ஆண்டுகளாகத் திறக்கப்படாத கல் சவப்பெட்டிக்குள் தங்க இலையால் மூடப்பட்ட மம்மி ஒன்றை கண்டுபிடித்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த மம்மி ஹெகசெப்ஸ் என்ற ஆணினுடையது என்றும் எகிப்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைமையான அரசர் அல்லாத ஒருவரின் முழுமையான மம்மி என்றும் நம்பப்படுகிறது.

எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்காக உள்ள சக்காராவில் இருக்கும் இடுகாடு ஒன்றின் 15 மீற்றர் ஆழத்தில் இந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மேலும் இரண்டு சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு அதில் ஒன்று ‘ரகசிய காவலர்’ உடையதாகும்.

இதில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மம்மி சுண்ணாம்புக் கல் சவப்பெட்டியில் மூடப்பட்டு சுண்ணாம்புக் கலைவையால் முத்திரையிடப்பட்டுள்ளது. “இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழையதும் முழுமையானதுமான மம்மியாக இது இருக்கக் கூடும்” என்று எகிப்தின் முன்னாள் தொல்பொருள் அமைச்சர் சாஹி ஹாவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சக்கார பண்டைய எகிப்தில் 3,000 ஆண்டுகளுக்கு மேல் இடுகாடாக இருந்திருப்பதோடு, தற்போது யுனெஸ்கோ மரபுரிமைத் தளமாக உள்ளது.


Add new comment

Or log in with...