- 2020 இல் வழங்கிய வரிச் சலுகையால் ஏற்பட் அரச வருமான வீழ்ச்சியே பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம்
- 2022 இல் -11% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 2023 இல் -3.5 அல்லது -4.0% ஆக இருக்கும்
அநுராதபுர இராஜ்ஜியத்தின் போது கடன் பெறாமல் பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது போன்று அடுத்த 05 முதல் 10 வருடங்களில் எவருக்கும் தலைசாய்க்காமல் பெருமையுடன் வாழக்கூடிய, கடனற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் வருமான நிலைமை ஸ்திரமாகி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிவாரணமாக மேலதிக கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அநுராதபுர புதிய அடமஸ்தானாதிபதி சியமோபாலி மகா நிகாய மல்வத்து பீட கண்டி வலய பிரதம சங்கநாயக்கதேரர் பல்லேகம ஹேமரதன அவர்களுக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கையளிக்கும் முகமாக வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதி மஹா விகாரையில் நேற்று (28) பிற்பகல் ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று சகலரும் எதிர்நோக்கியுள்ள சிரமங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, 2024 ஆம் ஆண்டளவில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார முன்னேற்றத்துடன் சம்பள உயர்வு உட்பட அனைத்து மக்களுக்கும் நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய அடமஸ்தானாதிபதிக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையளித்ததோடு விஜினி பத்திரத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அநுராதபுர மகா விகாரையின் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விசேட சட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,
‘’ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸ் ஆரம்பித்த பாரம்பரியத்தின் படி, எமது அடமஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரிடம் ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கையளிக்கப்படுகிறது. நான் சில வருடங்ககளுக்கு முன்பு எங்கள் மகா நாயக்கதேரரை அறிந்து கண்டுகொண்டேன். குறிப்பாக நான் கைத்தொழில் அமைச்சராக இருந்த போது வெசாக் அட்டையை நவீன முறையில் மாற்றுவதற்குத் தீர்மானித்தேன். முதலில் ரம்புக்கண தேரருடன் கலந்துரையாடிய பின்னர் அவர் எனக்காக ஒரு பாடலை இயற்றித் தந்தார். இரண்டாவதாக, இந்த அட்டையை தயாரிப்பது குறித்து பல்லேகம ஹேமரதன நாயக்க தேரருடன் கலந்துரையாடினோம். இரண்டாவது பாடலை பல்லேகம ஹேமரதன நாயக்கதேரர் இயற்றினார். எமது ரம்புக்கண நாயக்க தேரரும் பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரும் பாடல் இயற்றுவதில் வல்லுனர்களாக விளங்குகின்றனர்.
இன்று அடமஸ்தானத்தின் தலைவராக எமது பல்லேகம ஹேமரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் நான் அவரை ருவன்வெளி மஹாசாய நாயக்கதேரர் என்றே அறிந்திருந்தேன். புனித ஜெயஸ்ரீ மஹாபோ தற்போது அமைந்துள்ள இந்த பீடத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதற்கு அவர் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளார்.
புனித ஜெயஸ்ரீ மஹாபோ தான் இன்று உலகிலேயே மிகவும் பழமையான விருட்சமாக கருதப்படுகிறது. கௌதம புத்தர் ஞானம் அடைந்த புனித ஶ்ரீமஹாபோவின் கிளை தான் இங்குள்ளது. இந்த மகாமேவ்னாவில் ஜெயஸ்ரீ மஹா போதி போன்ற முக்கியமான மற்றொரு இடம் உள்ளது. இதுபற்றி எங்கள் நாயக்க தேரருடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளேன். ஜெயஸ்ரீ மஹா போதி தீவுக்கு விஜயம் செய்வதற்கு முன்,தேவநம்பியதிஸ்ஸ அரசன் , மகிந்த தேரருக்கு விகாரையொன்றை கட்டுவதற்காக இந்த இடத்தை வழங்கினார். அதைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த விகாரையாகும்.
இந்தப் மகாவிகாரையில் இருந்தே நமது தர்மம் காக்கப்பட்டது. இந்த விகாரையைச் சுற்றி தான் துட்டுகெமுனு மன்னன் மகாசாய பீடத்தைக் கட்டினான். மியான்மார், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்த மகாவிகாரையின் தேரவாத பௌத்த மதம் தான் இன்று நடைமுறையில் உள்ளது. ஆனால் இன்று இந்தப் மகாவிகாரையிலுள்ள எச்சங்களை கண்டுபிடித்து அந்த இடத்தை கட்டியெழுப்பும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை.
இன்று இந்தியா, நாலந்தாவை தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைத்து, அகழ்வாராய்ச்சிப் பணியை நாலந்தா பல்கலைக்கழகம் செய்து வருவதோடு புதிய பல்கலைக்கழகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. நமது அரசியலமைப்பின் 9ஆவது சரத்தில் தேரவாத பௌத்தத்தின் பாதுகாப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எம்மால் இன்னும் இந்தப் மகாவிகாரையில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்த மகாவிகாரையின் அகழ்வுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விசேட சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றேன்.இது தொடர்பில் எமது மகாநாயக்கதேரருடன் நான் கலந்துரையாடியுள்ளேன். எமது அடமஸ்தானதிபதி, ருவன்வெலி சாய நாயக்க தேரர், கலாசார முக்கோணம், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பட்டப்பின்படிப்பு நிறுவனம், ரஜரட்ட பல்கலைக்கழகம் , களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இதனை மேற்கொள்ள எதிர்பார்க்கிறேன்.
தேரவாத பௌத்தத்தின் இந்த மையத்தை முன்னோக்கிக்கொண்டு செல்வது குறித்து மியான்மார், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுடன் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம். பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரருடன் இது தொடர்பில் கலந்துரையாடி, அதன் பின்னர் உரிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கின்றேன்.
அநுராதபுர இராச்சியத்தை நாம் மறந்துவிட முடியாது. இந்த இராஜ்ஜியத்தின் வரலாறு தொடர்பில் நாம் சற்று கவனத்தை செலுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகளுக்கு உதவ பல்லேகம ஹேமரதன நாயக்க தேரருக்கு இன்று வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். பதவிகளின் பின்னால் அவர் ஓடவில்லை. பொறுமையாகக் காத்திருந்தார். அவருக்கு கிடைக்க வேண்டியதை அவர் பெற்றுள்ளார். அநுராதபுரம் மிக முக்கியமான நகரம். இந்த நாடு சுதந்திரம் அடைந்தபோது அதாவது 75 ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் அநுராதபுரத்தை காக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அந்தப் பணியை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஏற்றார். அவர் முன்னாள் சபாநாயகராகவும் பின்னர் பிரதமராகவும் இருந்தார். அநுராதபுரத்துக்கு வந்து அந்தப் பணிகளை ஆரம்பித்தார். அதன் பின்னர் தனக்குப் பிறந்த மகனுக்கும் அனுர என்று பெயரிட்டார். அதே போன்று தான் டி.எஸ். சேனநாயக்க அவர்கள் கல்ஓயா நீர்த்தேக்கத்தை ஆரம்பித்து வைத்தார். அதுதான் நீர்ப்பாசன வரலாற்றோடு நமக்குள்ள உறவாகும். அதனுடன், வலுவான பொருளாதாரம் உருவாகும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. மேலும், ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பொருளாதாரத்தைக் கொண்டிருந்த ஆசிய நாடு இலங்கை. ஆனால், இன்று 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், பொருளாதாரத்தில் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறோம்.
அதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதில் அனைத்து பொதுமக்களும், மதகுருமார்களும் கவனம் செலுத்துகிறார்கள். இந்த புரிதலுடன் நாம் எதிர்காலத்தில் பணியாற்ற வேண்டும்.
கடனை மீளச் செலுத்த முடியாதது தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரலில், சர்வதேசத்திற்கு அறிவித்தோம். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கடன் மறுசீரமைப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்தேன். நாங்கள் பெற்ற கடன் தொகை அதிகமாக இருப்பதால் கடனை மீளச் செலுத்த முடியாது என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி திட்டம் தயாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. முதலில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி திட்டம் தயாரிக்குமாறு, எமக்கு கடன் கொடுத்த சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் அறிவித்தன. அதன் பின்னர் அந்த நாடுகளினால் வழங்கக் கூடிய உதவிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.எனவே, இந்தக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட வேண்டியிருந்தது. இந்த உதவி இல்லாமல் எமக்கு முன்னோக்கிச் செல்ல முடியாது. இந்த உதவி கிடைக்காவிட்டால், நமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும். எமது நாட்டில் உள்ள நிதியும், அந்நியச் செலாவணியும் போதுமானதாக இல்லை. கடந்த ஆண்டு நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 மறைப்பெறுமானமாக இருந்தது. இந்த ஆண்டு, திட்டமிட்டு செயற்பட்டால் அதனை மறை 3.5 ஆக குறைக்கலாம். உலகளாவிய பிரச்சினைகள் இருந்தால் அது மறை 4 ஆக இருக்கும். ஆனால் மறை 3.5மாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். 2024ஆம் ஆண்டாகும் போது எமது பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். எங்களிடம் டொலர்கள் இல்லாத நிலையிலும் நாங்கள் எடுத்த நடவடிக்கைகளால் எங்களுக்கு சில உதவிகள் கிடைத்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல உதவிகள் கிடைக்க இருக்கின்றன.
மேலும், தேவையான உரம் வழங்கப்படுவதால், இம்முறை பெரும்போகம் வெற்றியடைந்து நெல் மேலதிகமாக இருக்கும். இந்தத் திட்டத்தில் இருந்து விலகிச் சென்றால், கடந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களில் இருந்த நிலைமைக்கு நாடு செல்லும். அப்படி நடந்தால் மேலும் கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். மூன்று வாரங்களுக்கு கூட மருந்து வாங்க எங்களிடம் பணம் இருக்காது.
தமது நாட்டு வருமானமும் குறைந்துள்ளதாகவும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அதிகபட்ச சுமையை தமது மக்களால் சுமக்க முடியாவிட்டால், தமது ஆதரவை வழங்குவது கடினமாக இருக்கும் என எமக்கு கடன் வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஏனென்றால் தங்கள் மக்களிடம் இருந்து வரி வசூலித்த பணத்தையே இவ்வாறு தந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
2019ல் நமது மொத்த வருவாய், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆகும். ஆனால் வரிக் குறைப்பினால், 2022ஆம் ஆண்டுக்குள் மொத்த வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4% ஆகக் குறைந்துள்ளது. உதவி வழங்குவதாக இருந்தால் 2019 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மொத்த வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக உயர்த்த வேண்டும் என்று அந்த நாடுகள் அறிவித்துள்ளன.அதாவது தற்போதைய வருமானம் 03 வருடங்களில் 75% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அதுதான் எங்களுக்கு இருக்கும் சவால். அப்படிச் செய்யாவிட்டால் நமக்கு உதவி கிடைக்காது. அப்படிச் செய்தால் பெரும் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும். ஆனால் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அவர்கள் முன்வைக்கும் விடயங்களை வைத்து நாம் வாதிடுவது கடினமானது.
இந்த நிலைமையை மேலும் விளக்குவதாக இருந்தால், 2019 இல் 15 இலட்சம் வருமான வரி தொடர்பான கோப்புகள் இருந்தன, அது தவிர வெட் வரி மற்றும் தேசத்தை அபிவிருத்தி செய்யும் வரி ஆகியவற்றை செலுத்துபவர்கள் தொடர்பான ஒரு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரம் கோப்புகள் இருந்தன. மொத்தம் 16 லட்சம் கோப்புகள் இருந்தன. இந்த வரிகள் நீக்கப்பட்டதன் மூலம், 2021 டிசம்பர் மாதத்தில் வருமான வரி செலுத்தும் 04 லட்சம் கோப்புகள் எங்களிடம் இருந்தன. 15 இலட்சத்தில் இருந்து 04 இலட்சமாக இது குறைந்துள்ளது.
மேலும், ஏனைய வரி செலுத்தும் கோப்புகள் ஒரு இலட்சத்து 22,000 இருந்து 9,976ஆக குறைந்துள்ளது. அந்த வகையில் எங்களிடம் இருந்த வரிக் கோப்புகள் 16 லட்சத்தில் இருந்து 04 லட்சமாக குறைந்துள்ளது. அதன்படி, இந்த வரிகளை வசூலிப்பதைக் குறைத்து, எங்கள் மக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய வரியை உங்களுக்கு எப்படித் தர முடியும் என அந்த நாடுகள் எம்மிடம் வினவின. அதன்படி, இந்த வரி விதிப்பை தற்போதைய நிலைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல் எமக்கு முன்னேற முடியாது.
2023 ஜனவரி 25 ஆம் திகதியன்று எங்களுக்குக் கிடைத்த வருமானம் 145 பில்லியன் ரூபா. சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி உட்பட அனைத்து மூலதனச் செலவினங்களுக்கும் 143 பில்லியன் செல்கிறது. மேலும், கடனை செலுத்த இன்னும் 355 பில்லியன்கள் தேவைப்படுகிறது. ஜனவரி மாதத்தில் எங்களின் மொத்தச் செலவு 498 பில்லியன் ரூபாவாகும். ஆனால் எங்களின் வருமானம் 145 பில்லியன். முறையான திட்டமொன்று செயல்படுத்தப்பட்டால், காலப்போக்கில் இந்த சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கான திறன் நமக்கு இருக்கிறது.
மேலும் சில பிரச்சினைகள் உள்ளன. 2022 ஆம் ஆண்டில் அரசு நிறுவனங்களின் நஷ்டம் 794 பில்லியன் ஆகும். அவற்றைச் செலுத்த இந்த ஆண்டு எங்களிடம் பணம் இல்லை. எனவே இந்த இழப்பை ஈடு செய்ய வேண்டும். இன்று மின்கட்டண பிரச்சினை அனைவரையும் பாதித்துள்ளது.
வரி வருவாயைப் பெறாவிட்டால், ஏனைய நாடுகளின் வரி வருவாயை வழங்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் எங்களுக்குத் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்கள் இன்னொரு விடயத்தையும் சுட்டிக் காட்டினார்கள். நம் நாட்டில் கூடுதலாக வரிச் செலவுகள் பொதுமக்கள் மீது தான் ஏற்றப்படுகிறது. தாய்லாந்து போன்ற நாடுகளில், அரசின் வருவாயில் 2.8% தான் தீர்வைவரி மூலம் கிடைக்கிறது. 30.1% வருமான வரியிலிருந்து பெறப்படுகிறது. இந்தியா தீர்வை வரிகளிலிருந்து 4.5% மற்றும் வருமான வரியிலிருந்து 45.6% மும் பெறுகிறது. நமது நாடு தீர்வை வரியிலிருந்து 26.3% மற்றும் வருமான வரியிலிருந்து 17.7% பெறுகிறது. எனவே, வரிகளை உயர்த்தும் போது, வருமான வரியை உயர்த்த வேண்டும் என்றும்,ஏனைய வரிகளை வசூலிப்பதால், குறைந்த வருமானம் பெறும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்றும், சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நாம் அனைவரும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இம்முறை பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு சிறந்த அருவடை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் ஏற்படும் அழுத்தத்தை அனைவரும் தாங்கிக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நாம் ஒதுங்கிவிட முடியாது.
நமது வருமானம் ஒரு நிலையான நிலைக்கு வந்தால், அது மேலும் அதிகரிக்குமாக இருந்தால், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அதிக கொடுப்பனவுகளை நிவாரணமாக வழங்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன். நமது பொருளாதாரம் மேம்படும்போது சம்பளமும் அதிகரிக்க வேண்டும். லாபத்தை அதிகரிக்க வேண்டும்.
இந்த உண்மைகளை ஒரு அரசியல்வாதியாக பேசுவது கடினமான பணி. ஆனால் நான் வென்றாலும் தோல்வியடைந்தாலும் நான் எப்போதும் உண்மையை சுட்டிக் காட்டுவேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தின் ஆதரவரவை வழங்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஜப்பான் உள்ளிட்ட பாரிஸ் மாநாட்டின் நாடுகள் எங்களின் முன்மொழிவுகளை ஏற்று அது தொடர்பில் ஆராய்ந்துள்ளன.அதே போன்று இந்தியாவுடனும் கலந்துரையாடப்பட்டது.
தற்போது அந்த முன்மொழிவை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. பெப்ரவரி மாதமளவில் இந்த நிலைமையுடன் நமக்கு அந்நிய செலாவணி கிடைக்கும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்க முடியும். புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அநுராதபுர இராச்சியம் கடன் பட்டிருக்கவில்லை. ஒரு வலுவான ராஜ்ஜியமாக இருந்தது. அதை மனதில் வைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்"
என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அடமஸ்தானத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுநாயக்க தேரர்கள், அனைத்து விஹாராதிபதி தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலக பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தூதுவர்கள், அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள் தலைமையிலான பாதுகாப்புப் படை பிரதானிகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தளதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேலபண்டார உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
Add new comment