பணம் வைப்பிலிடும் இயந்திரத்தை கொள்ளையிட்டுச் சென்ற கொள்ளையர்கள்

- பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டி வைத்து விட்டு கைவரிசை
- பயணித்த வேன் சாரதி கட்டப்பட்ட நிலையில் பேராதனையில் மீட்பு

கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றில் நேற்று (25) நள்ளிரவு 12.40 மணியளவில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவொன்று பணம் வைப்பிடும் இயந்திரத்தை அகற்றி அதனை வேன் ஒன்றில் ஏற்றி தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று (25) நள்ளிரவு 12.40 மணியளவில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவொன்று குறித்த வங்கியினுள் அத்துமீறி நுழைந்து வங்கியின் பாதுகாப்பு ஊழியரின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை நாற்காலியில் கட்டி வைத்துவிட்டு இக்கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக, கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளை நடந்த வங்கியின் முன்புறம் வந்த KDH வகை வேனை குறுக்காக நிறுத்தி விட்டு, அங்கு வந்த முகமூடி அணிந்த 4 பேர், பாதுகாப்பு ஊழியரின் தலையில் கைத்துப்பாக்கியைக் காட்டி அவரை மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த பணம் வைப்பிலிடும் இயந்திரத்தை கழற்றி வெளியே இழுத்து வந்து வேனில் ஏற்றிவிட்டு தப்பிச் சென்றதாக, பாதுகாப்பு ஊழியர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன்னை கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து வங்கியின் அவசர சமிக்ஞை ஒலி பொத்தானை அடித்ததாகவும், குறித்த வேனின் இலக்கத்தையும் தாம் எழுதி வைத்ததாகவும் குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் சைரன் ஒலியை அறிந்த, வங்கிக்கு அருகில் உள்ள கம்பளை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கொள்ளையர்கள் பயணித்த வாகனம் என சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று பேராதனை, கலஹா சந்தி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேன் ஹெம்மாத்தகம பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட ஒன்று என்றும் அதன் சாரதியை மற்றுமொரு கொள்ளையருடன் இறக்கி விட்டு அந்த வேனை மேலும் 4 பேர் பலாத்காரமாக எடுத்துச் சென்றதாகவும், பின்னர் அதிகாலை 5.00 மணியளவில் குறித்த இடத்திற்கு மீண்டும் வந்து தன்னை கட்டி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் வேனின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த இயந்திரத்தில் இருந்த பணம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதோடு, அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கம்பளை நகரில் உள்ள இந்த தனியார் வங்கிக்கு அருகில் மேலும் இரண்டு தனியார் வங்கிகள் உள்ள நிலையில், குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் மூன்று வங்கிகளின் பாதுகாவலர்களும் அங்கிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸ் விசேட குழுவொன்று முன்னெடுத்துள்ளது.


Add new comment

Or log in with...