ஈழத்து நவீன இலக்கிய உலகின் ஈடிணையற்ற இலக்கியவாதியாக திகழ்ந்த செங்கை ஆழியான்

- அமரரின் 82 ஆவது பிறந்த தினம் இன்று

மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர் எனும் பெருமைக்குரியவர் செங்கை ஆழியான் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் என அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் படைப்பாளுமை மிக்க 'செங்கை ஆழியான்' என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா 1941ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி யாழ் வண்ணார்பண்ணையில் பிறந்தார்.

இவர் யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர்கல்வியை பேராதனை பல்கலைக்கழகத்திலும் கற்றபின் பட்டம் பெற்று நிர்வாக சேவை அதிகாரியாக பணியாற்றினார்.

மண்வாசனை கொண்ட எழுத்தாளர் வரிசையில் செங்கை ஆழியானுக்கு இடம்பிடித்துக் கொடுத்த 'வாடைக் காற்று' என்ற நாவல் ஈழத்து நாவல் வரலாற்றில் ஒரு மைல்கல். செங்கை ஆழியானின் காட்டாறு, கடற்கோட்டை, ஒருமைய வட்டங்கள் முதலிய நாவல்கள் இத்தளத்தில் எழுதப்பட்டவையாகும். 'நீலவண்ணன்' என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.

ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'கிடுகு வேலி' என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், இவர் எழுதிய 'வாடைக்காற்று' புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு தரமான படைப்பு எனப் பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. அத்துடன் தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் பங்களிப்புச் செய்திருந்தார்.

இவரது சிறுகதைகள் தினகரன், ஈழநாடு, வீரகேசரி, புதினம், செய்தி, சஞ்சீவி, சுதந்திரன், சிந்தாமணி, இளங்கதிர், தமிழின்பம், கதம்பம், கலைச்செல்வி, தேனருவி, அமுதம், விவேகி, இலக்கியம், மலர், அஞ்சலி, மல்லிகை, மாணிக்கம், அமிர்தகங்கை, மாலைமுரசு, வெளிச்சம், நான், ஆதாரம், அறிவுக்களஞ்சியம் , அர்ச்சுனா, ஈழமுரசு, நுண்ணறிவியல், சிரித்திரன், தினக்குரல், ஈழமுரசு, மறுமலர்ச்சி, ஈழநாதம், புதிய உலகம் முதலிய இலங்கை இதழ்களிலும் உமா, தாமரை , கணையாழி, குமுதம், சுபமங்களா, கலைக்கதிர், கலைமகள், ஆனந்தவிகடன் முதலிய தமிழ்நாட்டு இதழ்களிலும், பாரீஸ் ஈழநாடு, இலண்டன் ஈழகேசரி கனடாவிலிருந்து வெளிவரும் நம்நாடு, தாயகம், செந்தாமரை, உதயன் முதலிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

செங்கை ஆழியான் ‘புவியியல்’ என்ற அறிவியல் இதழை நடத்தினார். மேலும், ‘விவேகி’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர்களில் ஒருவராக விளங்கினார். சிங்கள இதழ்களான ராவய, சிலுமின, லங்காதீப முதலியவற்றில் இவரது சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

மண்ணும் மக்களும், மக்களின் உரிமைக்குரல்கள், உழைப்புச் சுரண்டல், சாதிக்கொடுமை, சீதனக் கொடுமை, இனவெறிப் போராட்டம் என்ற வகையில் செங்கை ஆழியானின் சமூகம் நோக்கிய அகலப் பார்வை, அவரது நாவல்களின் கருப்பொருளாக அமையலாயின.

 

சிங்கள மொழிபெயர்ப்பு:

இவரது 'இரவுநேரப் பயணிகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு, ‘ ராத்திரி நொனசாய்’ எனச் சிங்களத்தில் சாமிநாதன் விமல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ‘காட்டாறு’ என்ற நாவல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘வன மத கங்க’ என்ற பெயரிலும், ‘வாடைக்காற்று’ என்ற நாவலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் சிங்கள இதழ்களான ராவய, சிலுமின, லங்காதீப முதலியவற்றில் இவரது சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

செங்கை ஆழியான் பெற்ற விருதுகள் மற்றும் பரிசுகள் ஏராளம்.இலங்கை தேசிய சாகித்திய மண்டலப் பரிசுகள் , சென்னை இலக்கியச் சிந்தனைப் பரிசு, ஈழநாடு 10 ஆவது ஆண்டு நாவல் பரிசு மற்றும் சிறுகதைப் பரிசு, வடகிழக்கு மாகாண சாகித்திய விருதுகள் , இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசு , கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசுகள், தமிழ்நாடு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியப் பரிசு, கலைமகள் குறுநாவல் போட்டி பரிசு, விஜயகுமாரதுங்க கலாசார விருது, அரசகரும மொழித் திணைக்கள கலாசார நிகழ்ச்சித் திட்டப் பரிசு, அமுதம் சிறுகதைப் போட்டி பரிசு, இளங்கதிர் குறுநாவல் போட்டி பரிசு, வீரகேசரி அகில இலங்கை நாவல் போட்டி பரிசு முதலிய பரிசுகள் பெற்றுள்ளார்.

விருதுகளை குவித்த ஆளுமை:

அத்துடன் இலங்கை இந்து கலாசார அமைச்சு, ‘இலக்கியச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கனடா சி.வை. தாமோதரம்பிள்ளை ஒன்றியம் ‘புனைகதைப் புரவலர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு 2001 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் இலக்கிய விழாவில் ‘ஆளுநர் விருது’ வழங்கிச் சிறப்பித்தது .

இலங்கை அரசு இலக்கியத் துறையின் உயர்ந்த விருதான ‘சாகித்திய ரத்னா’ விருதினை 2009 ஆம் ஆண்டு செங்கை ஆழியானுக்கு வழங்கிச் சிறப்பித்தது. மேலும் ‘கலைஞானச் சுடர்’ ‘கலாபூஷணம்’ முதலிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.

தன்னுடைய 75 ஆவது பிறந்த நாள் நினைவாக 2016 ஜனவரி 25 ஆம் நாள் ‘யாழ்ப்பாணம் பாரீர்’ என்ற மகுடத்தில் விவரண நூல் ஒன்றினை வெளிக்கொணர்ந்த செங்கை ஆழியான் 185 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐம்பது நாவல்கள், இலக்கியம், கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, நூற்றுக்கும் மேற்பட்ட பாடநூல்கள், திரைப்படம் என பல பரிமாணங்களில் இவருடைய படைப்பாளுமை பரந்து விரிகின்றது.

ஈழத்து நவீன இலக்கிய உலகின் ஈடிணையற்ற இலக்கியவாதியாகத் திகழ்ந்த செங்கை ஆழியான் 28 பெப்ரவரி 2016 தனது 75 ஆவது வயதில் இயற்கையெய்தினார்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா...


Add new comment

Or log in with...