தேர்தலுக்கான நிதியைக் கோரி நிதியமைச்சின் செயலருக்கு கடிதம்

போதுமான நிதி கிடைக்காவிடின் தேர்தலை நடத்த முடியாது

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான செலவுகளுக்கு நிதி கோரி, நிதியமைச்சின் செயலாளருக்கு இன்று அல்லது நாளை கடிதம் அனுப்பவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள நிதியில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குத் தேவையான நிதி கிடைக்காவிட்டால் தேர்தலை நடத்த முடியாமற்போகுமென,தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகள் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையிலேயே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிதி கோரி கடிதம் அனுப்பவுள்ளார்.

தேர்தல் செலவினங்களுக்காக 2 கோடியே 50 இலட்சம் ரூபா ஏற்கனவே நிதியமைச்சினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான முன்னோடி தேவைகளுக்காக டென்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர்

தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா அண்மையில் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார். இந்நிலையில் நிதியமைச்சின் செயலாளர், தேர்தலுக்காக நிதி ஒதுக்க முடியாத நிலை காணப்படுவதாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...