மன்னிப்புக் கோரியதே போதுமென்கிறார் அமைச்சர்
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்னவுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாதென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையினால் கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கிணங்க, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொறுப்பேற்க வேண்டாமென தெரிவித்து பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபமொன்றை வெளியிட்டிருந்தார். அந்த சுற்று நிருபத்தை
அவர், நாட்டின் அனைத்து தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் வழங்கியிருந்தார். எவ்வாறாயினும் அந்த சுற்றுநிருபத்தை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேர்தல் ஆணைக்குழு மூலம் விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்க அவ்வாறான கூற்றை வெளியிட்டமைக்காக கடந்த 13 ஆம் திகதி பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரியிருந்தாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுதொடர்பில், நேற்றைய தினம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அவ்வாறான உத்தரவைப் பிறப்பித்தாலும் பின்னர் அதனை மீளப்பெற்றுக்கொண்டார்.
இதனால் சட்டரீதியான எந்த அழுத்தமும் ஏற்படவில்லை. அவ்வாறான தவறுகள் இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளர்களினால் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் அவருக்கெதிராக எத்தனைய நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Add new comment