வரித் திருத்தத்தை எதிர்ப்பதால் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்குமா?

கறுப்பு எதிர்ப்பு வாரப் போராட்டமொன்றை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நேற்றுமுன்தினம் ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இக்கறுப்பு எதிர்ப்பு வாரத்தைத் தொடங்கி இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஜனநாயக நாடொன்றில் அகிம்சை முறையிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சுதந்திரம் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆட்சேபனையும் எதிர்ப்பும் மாத்திரமல்லாமல் ஆதரவும் தெரிவிக்கப்படுகின்றது. அவை ஜனநாயக ரீதியில் இந்நாட்டு பிரஜைகள் பெற்றுள்ள உரிமையும் சுதந்திரமும் ஆகும். அந்த வகையில்தான் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள வரித்திருத்தங்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் இந்த கறுப்பு எதிர்ப்பு வாரத்தை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்து இருக்கின்றனர்.

ஆனால் இவ்வாறான போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு முன்னர் மக்களதும் நாட்டினதும் நலன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது மருத்துவர் என்பதை விடவும் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் முன்பாக உள்ள பொறுப்பாகும்.

ஏனென்றால் கடந்த வருடம் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இந்நாடு எதிர்கொண்டது. அதிலும் வருடத்தின் நடுப்பகுதியில் இப்பொருளாதார நெருக்கடி மிகத் தீவிர நிலையை அடைந்திருந்தது. அதனால் நாடும் மக்களும் பலவிதமான அசௌகரியங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எரிபொருள் மற்றும் எரிவாயு அடங்கலாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களதும் விலைகள் பெரிதும் அதிகரித்தன. அதனால் இப்பொருளாதார நெருக்கடிக்கு தீர்வும் நிவாரணமும் கோரி ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சுதந்திரத்தின் பின்னர் முன்னொருபோதும் முகம்கொடுத்திராத பொருளாதார நெருக்கடியையே இந்நாடு கடந்த ஆண்டு சந்தித்தது.

இவ்வாறான சூழலில் நாட்டின் தலைமைப் பதவியை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டையும் மக்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலானார். அத்திட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் விரிவான முறையில் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பயனாக நாடு எதிர்கொண்ட தீவிர பொருளாதார நெருக்கடி குறுகிய காலப்பகுதிக்குள் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதன் பிரதிபலன்களாக எரிபொருள், எரிவாயு அடங்கலாக பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல தடவைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிபலன்கள் மக்களை சென்றடையவும் தொடங்கி விட்டன.

இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அழுத்தங்களும் முற்றாக நீங்கி விடவுமில்லை. பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு முன்னரான நிலையும் இன்னும் ஏற்படவும் இல்லை. ஆனால் இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதில் ஜனாதிபதி தலைமையில் உறுதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அந்த வகையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் நாட்டுக்கு தேவையான வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவே வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இது நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு இருக்கும் திருத்தமேயன்றி வேறில்லை. இதைவிடுத்து எவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் திருத்தமல்ல இது.

இந்நிலையில் இவ்வரித்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதானது, நாடு வருமானம் பெற்றுக்கொள்ள முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தைப் பாதிக்க முடியும். தற்போதைய சூழலில் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீட்சி பெறுவதற்கு நாட்டுக்கு வருமானம் மிகவும் அவசியமானது. அவ்வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் மார்க்கமாகவே இவ்வரித்திருத்தத்தை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

இவ்வாறான சூழலில் இத்திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் போது நாட்டை மீட்டெடுப்பதற்குத் தேவையான வருமானத்தை பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளுக்கும் தாமதங்களுக்கும் உள்ளாக நேரிடும். அதன் காரணத்தினால் நாடு மீண்டும் தீவிர பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படக் கூடிய அச்சுறுத்தல் ஏற்படலாம். அது மீண்டும் நெருக்கடி நிலை நாட்டில் ஏற்படவே வழிவகுக்கும்.

அதனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கும் வேலைத்திட்டங்களுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. அது நாட்டின் சுபிட்சத்திற்காக அளிக்கப்படும் பங்களிப்பே அன்றி வேறில்லை.

ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் செயற்பட வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.


Add new comment

Or log in with...