கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி; 67 வயது சந்தேகநபர் கைது

கலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே உள்ள கலிபோர்னியா கடலோர விவசாய பண்ணை துப்பாக்கிச் சூட்டில் 4 பேரும் அங்கிருந்து 48 கிலோமீட்டர் ஆப் மூன் பே நகரத்திற்கு வெளியே 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் சந்தேகத்திற்குரிய நபரான 67 வயதான சாவோ சுன்லி (Zhao Chunli) என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்தே, பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

விவசாய பண்ணையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் நான்கு பேர் இறந்த நிலையிலும் ஐந்தாவது நபர் காயமடைந்தும், மற்றொரு இடத்தில் மூன்று பேர் இறந்த நிலையிலும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பலியானவர்கள் அனைவரும் சீன-அமெரிக்க பண்ணை தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த வாரம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

16 வயதுத் தாய், 10 மாத மகன் மற்றும் அந்தக் குழந்தையின் பாட்டி, கொள்ளுப்பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

போதைக் கடத்தலுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்திலேயே குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, ஆசிய அமெரிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் லொஸ் ஏஞ்சல்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்வே ஒழுங்கையில் இருக்கும் பொல்ரூம் நடன விடுதி ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதில் 72 வயது ஹூ கேன் என்பவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி இருப்பதாகவும் பொலிஸார் அவரை நெருங்கியபோது தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்ததாக கலிபோர்னிய கௌண்டி சரிப் ரொபர்ட் லூனா தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டு ஆரம்பத்திலேயே அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் பாரிய படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அந்த வகையில் கடந்த மூன்று வாரங்களுக்குள் 39 பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...