சிரியாவில் கட்டடம் இடிந்து 16 பேர் மரணம்

சிரியாவில் ஐந்து மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் ஞாயிறு (22) அதிகாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அந்தக் கட்டடத்தில் உள்ள வீடுகளில் சுமார் 30 பேர் வசித்து வந்தனர். தண்ணீர் கசிவு காரணமாக கட்டடத்தின் அடித்தளம் பலமிழந்து இருந்த நிலையில், ஐந்து மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில், அலெப்போ நகரமானது அமெரிக்க ஆதரவு குர்திஷ் படையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான குடியிருப்புகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. அலெப்போ நகரமானது ஒரு காலத்தில் சிரியாவின் வார்த்தக மையமாக இருந்து வந்தது.


Add new comment

Or log in with...