இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடையை நீக்க FIFA 3 நிபந்தனை

புதிய சட்டத்தை அமுல்படுத்த அழுத்தம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிப்பது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் இரு கடிதங்களை வெளியிட்டிருப்பது ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

இதில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் உபாலி ஹேவகேவுக்கு இந்த இரு கடிதங்களும் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அதில் நாட்டின் கால்பந்து நிர்வாகக் குழுவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தடைக்கான பல காரணங்களையும் அந்த இரு கடிதங்களும் குறிப்பிட்டுள்ளன.

ஹேவகேவுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “பிஃபா சட்டங்களின் கட்டுரை 16 பந்தி 1க்கு அமையவும் பிஃபா சட்டத்தின் கட்டுரை 14 பந்தி 1 க்கு அமையவும் மேற்கூறிய சூழ்நிலைகள் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற தலையீட்டை உருவாக்குவதாக பணியகம் கருதுகிறது. அதனால், பிஃபா சட்டங்களை அப்பட்டமாக மீறியதன் காரணமாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த 2023 ஜனவரி 21 ஆம் திகதி பணியகம் தீர்மானித்துன்னது.”

மற்றக் கடிதம் பிஃபாவின் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “2023 ஜனவரி 21 அன்று பிஃபா சபையின் பணியகத்தின் மூலம் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக, பிஃபா சட்டத்தின் கட்டுரை 16க்கு அமைவாக மறு அறிவித்தல் வரை இலங்கை கால்பந்து சம்மேளனம் இடைநிறுத்தப்படுகிறது என்பதை நாம் இத்தால் அறியத்தருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேவகேவுக்கு அனுப்பிய கடிதத்தில் தடையை நீக்குவதற்கு மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் விதிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட (2022 செப்டெம்பர் 22) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் சட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது மற்றும் செயற்படுத்துவதை உறுதி அளிக்கும் பொருட்டு இலங்கை கால்பந்து/ FFSL க்கு தற்போதைய தேசிய விளையாட்டு சட்டத்தில் இருந்து அதிகாரப்பூர்வ மற்றும் எழுத்துப்பூர்வ விலக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும் என்பது இதன் முதல் நிபந்தனையாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று 2023 ஜனவரி 14 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலை பிஃபா அல்லது ஆசிய கால்பந்து சம்மேளனம் அங்கீகரிக்காததால் புதிய நிறைவேற்றுக் குழு ஒன்று தேர்வு செய்யப்படும் வரை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தினசரி விவகாரங்களுக்கு இலங்கை கால்பந்து சம்மேளன நிர்வாகக் குழு பொறுப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மற்றொரு நிபந்தனையாக, புதிதாக நிறைவேற்றப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் சட்டத்தின்படி புதிய FFSL நிறைவேற்றுக் குழுவுக்கான தேர்தல் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதோடு குறிப்பாக அது இரகசிய வாக்கெடுப்பாகவும் நான்கு ஆண்டு தவணையை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிறைவேற்றுக் குழு இன்னும் கடமைகளை பொறுப்பேற்கவில்லை என்றும் எந்த தடைகள் பற்றியும் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் கிடைக்கவில்லை என்றும் FFSL செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திக்க தெனுவர ஊடகம் ஒன்று கடந்த ஞாயிறன்று கூறியிருந்தார்.

இதனால் இந்த விடயம் பற்றி தம்மால் கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 14ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் மூலம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா தேர்வுசெய்யப்பட்டார். எனினும் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் லெப்பே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்த முறையீட்டை அடுத்து புதிய நிர்வாகத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) அந்த உத்தரவு நீக்கப்பட்டது.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தன்னை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என குற்றம் சுமத்தியே ஜஸ்வர் உமர் நீதிமன்றத்திற்கு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தடை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இலங்கை கால்பந்து சம்மேளன பிரதிநிதிகளாலோ அல்லது கழக அணிகள் மூலமாகவோ சர்வதேச தொடர்களில் பங்கெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தடை அமுலில் உள்ள சந்தர்ப்பத்தில் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கோ அல்லது அதன் உத்தியோகபூர்வ அதிகாரிகளுக்கோ சர்வதேச கால்பந்து சம்மேளனம் அல்லது ஆசிய கால்பந்து சம்மேளனம் மூலம் கிடைக்கின்ற அனைத்து வகையான நிதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் கால்பந்து அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதற்காக அண்மைய ஆண்டுகளில் 1.5 மில்லியன் டொலர் வீதமான நிதியை வழங்கியுள்ளது. ஆசிய கால்பந்து சம்மேளனமும் இலங்கைக்கு வருடத்திற்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியை வழங்குகிறது. இந்தத் தடையால் இவை அனைத்து நிறுத்தப்படுகின்றன.


Add new comment

Or log in with...