பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார நுகர்வோர் சங்க செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அச்சுறுத்தியதுடன், அவர்களின் கடமைகளைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் காணொளிக் காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதற்கமைய குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் நேற்றிரவு (23) வத்தளை மற்றும் மெல்லவகெதர பிரதேசத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் (ஆனந்த பாலித) எனவும், மற்றைய சந்தேக நபர் 48 வயதான (சஞ்சீவ தம்மிக்க) மல்லவகெதர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோரால் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின் கட்டணத்தை அதிகரிப்பதை மேற்கொள்ளாதிருப்பது தொடர்பில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் மாற்று கருத்தை கொண்டுள்ளமை தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிடுவதற்காக சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் ஆணைக்குழுவிற்கு வந்திருந்த வேளையில், குறித்த இருவரும் மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்கவிற்கு அச்சுறுத்தும் வகையில் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களை இன்றையதினம் (24) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment