உயிரைப் பறிக்கும் ஆயுதமா காதல்?

ஒரு பெண்ணின் நிராகரிப்பையும், தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை பெரும்பாலான ஆண்களுக்கு இல்லையென்பதையே இத்தகைய சம்பவங்கள் மூலம் புலப்படுத்துகின்றன

காதலுக்காக உயிரையும் கொடுப்பேன்' என்று சொன்னது அந்தக் காலம். காதல் செய்தால் உயிரை எடுப்பது இந்தக் காலம். இதுவொரு டிரண்டாகவே இன்று மாறிவிட்டது. காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்களை விட காதலால் கொலை செய்யப்பட்டவர்களே அதிகம் என்று சொல்லும் அளவிற்கு காதல் கொலைகள் குலை நடுங்க வைக்கின்றன. அந்த வரிசையில் சேர்க்கப்பட்ட புதிய கதைதான் கொழும்பு பல்கலைக்கழக மாணவி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம்.

இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய அதேசமயம் கொல்லப்பட்ட மாணவி தொடர்பில் போலிக்கதைகளும் கேலிக்கதைகளும் சமூகத்தில் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன. எனினும் அது தவறான தகவல்களே.

தனது காதலியைப் புரிந்துகொள்ளாத காதலனால் அந்த அப்பாவிப்பெண்ணின் உயிர் பலியானது. காதலன் தனது காதலியை சதா சந்தேக கண்ணோட்டத்துடனேயே பார்த்தான். தான் அவளுக்குப் பொருத்தமானவன் அல்ல. வேறு எவனோ அவளைக் கவர்ந்து விடுவான் என்ற பயம் அவனை வாட்டியது. இறுதியில் அதற்கு இடமளிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பலநாட்களாக நேசித்தவளையே கொல்லும் அளவுக்கு அவனது இதயம் கொடூரமாக மாறிவிட்டது.

அவனுடைய ஆத்திரத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரின் வாழ்வும் பாழாகிவிட்டது. இன்று சதுரங்க, நான்கு சுவர்­க­ளுக்குள் அடைக்­கப்­பட்டு சிறைக் கைதி­யானான்.

பசிந்து சதுரங்க (23) வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவன். பெரிதாக வசதிவாய்ப்புகள் இல்லாத வறிய குடும்பம். தாய் தேயிலைத் தொழிற்சாலையில் வேலை செய்தார். தந்தை முச்சக்கர வண்டிச் சாரதி. இவர்கள் இருவரினதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு சதுரங்க தான். சதுரங்க படித்து தொழில் செய்து தனது தங்கையை பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் தான் அவனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி படிக்கவைத்தனர்.

சதுரங்கவும் அவனுடைய தங்கையும் ஊரிலுள்ள பாடசாலையிலேயே கல்விகற்றனர். இவர்கள் இருவரினதும் வாழ்க்கையும் புத்தகங்களுடனேயே கழிந்தது. படிப்பதைத் தவிர வேறு எதிலும் அவர்கள் ஈடுபடுவதை காணமுடியாது. சதுரங்க தனது பெற்றோரின் பாரத்தை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கொடை, கொட்டிக்காவத்தை,கொலன்னாவ, வெல்லம்பிட்டி, களனி, கிரிபத்கொட போன்ற பகுதிகளில் வீடுகளுக்கு சென்று மேலதிக வகுப்பெடுத்து பணம் சம்பாதித்தான்.

எனினும் உயிரிழந்த ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சியின் குடும்பப் பின்னணி அவ்வாறிருக்கவில்லை. வசதிவாய்ப்புகளுக்கும் அவருக்குக் குறைவிருக்கவில்லை. தாயும் தந்தையும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள். சதுரிக்கு பிறகு ஒரு தங்கை. பெற்றோர் இரு பெண்பிள்ளைகளையும் இரு கண்களாக பேணி பாதுகாத்தனர். சதுரி சேவை நோக்கோடு கல்வி YouTube Channel ஒன்றை நடாத்திவந்தார். பணம் சம்பாதிப்பது அவளின் நோக்கமாக இருக்கவில்லை.

சதுரங்க, சதுரி என்ற ஒரே மாதிரியான பெயர்களை கொண்ட இந்த இளம் காதல் ஜோடி, கொழும்பு பல்கலைக்கழகத்திலேயே சந்தித்துகொண்டனர். இருவரும் உயர்தர கணிதப்பிரிவில் சித்தியடைந்து ஆயிரம் கனவுகளுடன் 2019ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் முதல் முதலில் காலடி எடுத்து வைத்தனர். அதுவே இருவரும் சந்தித்த முதல் நாளும் கூட. சதுரங்கவுக்கு சதுரியை கண்டவுடனே பிடித்துப் போனது. எனினும் அவனுக்கு காதலை வெளிப்படுத்த துணிவிருக்கவில்லை. அவளை ஒருதலைப் பட்சமாக காதலித்தான். 2020ஆம் ஆண்டு ஒருவழியாய் தனது காதலை அவளிடம் வெளிப்படுத்தினான். எனினும் சதுரி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி அவள் சதுரங்கவை ஏற்றுகொண்டு காதலுக்கு பச்சைகொடி காட்டினாள். சதுரங்க எந்தவித ஒளிமறைவுமின்றி தனது குடும்ப பிண்ணனி, முதல் காதல் அனுபவங்கள் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டான்.

பள்ளிவாழ்வில் காதலை தொலைத்து உயிரை மாய்த்துக்கொள்ள தற்கொலை செய்ய முயற்சித்ததையும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடி உயிர் பிழைத்த கதையையும் அவளிடம் தெரிவித்துள்ளான். அதுமட்டுமின்றி அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளான். எனினும் சதுரி அது எதையுமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவள் அன்பு என்னும் தூரிகை கொண்டு அவன் வாழ்வில் நிறமூட்டினாள். எனினும் அந்த மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை. சதுரங்க பள்ளி காதலியை போல் சதுரியும் தன்னை விட்டு பிரிந்துசென்று இன்னொருவனுக்கு சொந்தமாகி விடுவாளோ என்று நினைத்து நினைத்து வேதனைப்பட்டான். அவள் மீது சந்தேகம் கொண்டான். ஏனைய பல்கலைக்கழக ஆண் நண்பர்களுடன் கதைத்தால் இருவருக்கும் இடையில் அன்றைய தினம் சண்டை சச்சரவாகவே இருக்கும். எனினும் சதுரங்கவை நன்கு புரிந்து வைத்திருந்தமையால் சதுரி எல்லாவற்றையும் பொறுத்துகொண்டாள்.

காலப்போக்கில் சதுரியின் சுதந்திரம் பறிபோனது. இதனால் இனியும் பொறுக்கமுடியாது என்ற நிலையில் இருவருக்கும் இடையிலான உறவை சிறிது காலத்துக்கு நிறுத்திகொள்வோம் என சதுரி அவனிடம் அறிவுறுத்தினாள். அதன்படி இருவரும் புரிதலுடன் சிறிதுகாலத்துக்கு பிரிந்திருந்தனர். இக்காலப்பகுதியில் சதுரங்க இன்னொரு பெண்ணையோ சதுரி இன்னொரு ஆணையோ தேடிச்செல்லவில்லை. இருவரும் நண்பர்களை போல் பழகினர். எனினும் தொடர்ந்து அவர்களால் அவ்வாறிருக்க முடியவில்லை. மீண்டும் காதலர்களாகி கைகோர்த்து சுற்றிதிரிந்தனர்.

இதுஇவ்வாறிருக்க சதுரங்கவின் மனநோய் தீவிரமடைந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அங்கொட மனநல வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருந்தது. அதன்பின்னர் சதுரங்கவின் நோயின் தீவிரம் தொடர்பில் சதுரி அறிந்து கொள்ள, அவளுக்குள் பயம் தொற்றிக்ெகாண்டது. அங்கொட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் சதுரங்கவுக்கு 'இருவருக்குமிடையிலான காதல் உறவை முறிந்துக்கொள்வோம்'என குறுந்தகவல் அனுப்புகின்றாள். இதை பார்த்து சதுரங்க மேலும் வேதனை அடைகின்றான். என்னை விட்டு போகாதே என்று அவளிடம் கெஞ்சி மன்றாடினான். கண்ணீருடன் முழுமனதாக காதலிப்பதாக கூறினான். இதனால் சதுரியால் அவனை விட்டு உடனடியாக பிரிந்துசெல்ல முடியவில்லை. எங்கே சதுரங்கவை விட்டு பிரிந்தால் அவன் தவறான முடிவை எடுத்து விடுவானோ எனப் பயந்தாள். அவனுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடிவு செய்தாள். எனினும் சதுரங்கவுக்கு அவள் மீது சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அவளுக்கு வேறு ஆண் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தான். இதனால் நாளுக்கு நாள் காதல் உறவில் விரிசல் ஏற்பட்டது. சதுரங்கவின் நண்பர்களும் சதுரிக்காவுக்கு அறிவுரை வழங்கினர். ஆயினும் யார் சொல்லியும் சதுரங்கவின் நோய் நிலைமையை நினைத்து அவள் அவனை கைவிடவில்லை.

இத்தகையதொரு பின்னணியில் தான் அந்த கொடூர சம்பவம் கடந்த 17ஆம் திகதி நடைபெற்றது. அன்று நடந்த விரிவுரைகளை பாதியில் நிறுத்திவிட்டு இருவரும் கைகோர்த்து நடந்தவாறு சுதந்திர சதுக்கத்துக்கு வருகின்றனர். அங்கு சிறிது நேரம் பல இடங்களில் தங்கிவிட்டு, குதிரைப் பந்தய மைதானத்துக்கு வருகின்றனர். அங்கு தான் முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்த ஒரு பல்கலைக் கழகக் காதலின் முடிவு எழுதப்படுகிறது.

சதுரங்க உயிருக்கு உயிராய் காதலித்த சதுரியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினான்.

சம்பவம் நடந்து சில மணித்தியாலங்களுக்குள் சி.சி.ரி.வி காட்சிகளை அடிப்படையாக கொண்டு பொலிஸார் அன்றைய தினம் சந்தேகநபரான காதலன் சதுரங்கவை கைதுசெய்தனர். அதனைதொடர்ந்து சதுரியின் கொலைச் சம்பவத்தின் மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது.

"சூட்டி (சதுரங்க சதுரியை செல்லமாக அழைக்கும் பெயர்) சமீபகாலமாகவே என்னை விட்டு விலகுவதற்கு எண்ணியிருந்தாள். ஆனால் அவளை இழக்க நான் தயாராக இல்லை. நான் அங்கொட வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் அவள் மாறிவிட்டாள். அவள் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக எண்ணினேன். எனினும் அதை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவளை எனக்கு சொந்தமாக்கி கொள்ள முடியாவிட்டால் வேறு யாருக்கும் சொந்தமாக்க விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். பலமுறை என்னை பைத்தியக்காரன் என்றெல்லாம் ஏசியிருந்தாள். அதை எண்ணி நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவளை கொல்ல வேண்டும் என்று நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டேன். அன்றைய தினம் அவளை கொல்வதற்கு திட்டமிட்டுக் கொண்டே பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்றேன். விரிவுரையின் போது அவளிடம் 'உன்னிடம் மனம் விட்டு பேச வேண்டும். வெளியில் வா' என்று கூப்பிட்டேன். அவளும் என்னை நம்பி கைகோர்த்துகொண்டு வந்தாள். நான் முதலில் அவளை சுதந்திர சதுக்கத்திற்கு கூட்டிச்சென்றேன். அங்கு அவளை கத்தியால் குத்துவதற்கு திட்டமிட்டேன். எனினும் கூட்டம் அதிகமாகவிருந்தமையால் எனது திட்டம் ஈடேறவில்லை. பின்னர் அங்கிருந்து கொழும்பு குதிரைப்பந்தய திடலுக்கு அழைத்துச்சென்றேன். ' அவள் இங்கிருந்து என்னால் இனி எங்கும் செல்ல முடியாது' என்றாள். நான், ' 'இனி நீ எங்கும் போகமாட்டாய்' என்றேன். அங்கு வைத்து surprise ஒன்று தரப்போவதாக சொல்லி கண்களை மூடசொன்னேன். அவளும் என்னை நம்பி கண்களை மூடினாள். எனினும் கத்தியால் குத்தும் போது கண்களை திறந்துவிடுவாளோ என்ற பயம் எனக்கிருந்தமையால் என் கைக்குட்டையால் அவள் கண்களை மறைத்தேன். அவள் என்னை மோசமாக திட்டியது அந்தநேரத்தில் நினைவுக்கு வர ... எதைப்பற்றியும் யோசிக்காமல் பலமுறை கத்தியால் குத்தினேன். அவள் வலியால் துடிதுடித்துப் போனாள். கைக்குட்டையை அவிழ்த்து உதவிகேட்டுக் கத்தினாள். நான் அங்கிருந்து தப்பித்து வளாகத்தை நோக்கி ஒடினேன். " என அந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை பொலிஸ் வாக்குமூலத்தில் சதுரங்க தெரிவித்திருந்தான்.

அங்கிருந்து தப்பிச்சென்ற சதுரங்க தற்கொலைக்கு முயற்சித்த போதும் அதை எதிர்கொள்ள துணிவின்றி தோற்றுபோனான். அதன்பின்னர் வீட்டுக்குச் சென்று தனது பணப்பையையும் கைபேசியையும் இரத்த கறைபடிந்த பையையும் வீட்டில் வைத்துவிட்டு புதிய உடையணிந்து வெளியில் சென்று மூன்றாவது தடவையாகவும் தற்கொலைக்கு முயற்சிக்கின்றான். அதில் தோற்றுப்போய் நான்காவது தடவையாக தற்கொலை செய்ய முயற்சிக்கும் போதே பொலிஸார் அதற்கு இடமளிக்காது அவனை பிற்பகல் 4 மணியளவில் கைதுசெய்கின்றனர்.

சதுரங்க தொடர்ந்து விசாரணைகளின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான். சதுரிக்காவின் இறுதிக் கிரியைகள் கல்கந்த பொது மயானத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றன.

வசந்தா அருள்ரட்ணம்


Add new comment

Or log in with...