COVID-19 பெருந்தொற்று மீண்டும் தீவிரமடையுமா?

 
 
இன்றைய நவீன அறிவியல் உலகில் முழு மனித சமுதாயத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் 2019 ஆண்டின் இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்ற கொவிட் 19 தொற்று, கடும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் ஊடாகப் பெரு வீழ்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு இத்தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களும் இத்தொற்றின் தாக்கங்களைப் பலவீனப்படுத்தக்கூடிய தடுப்பூசியும் பெரிதும் உதவியுள்ளன.
 
ஆனால் கொவிட் 19 தொற்றானது கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். பொதுவாக வைரஸ் வகைளில் பெரும்பாலானவை காலத்திற்கு காலம் பிறழ்வுக்கு உள்ளாகக் கூடியவை. அந்த வகையில் கொவிட் 19 தொற்று வைரஸும் பிறழ்வுக்கு உள்ளாகக் கூடியதாக விளங்குகின்றன. இத்தொற்றில் ஏற்கனவே பல பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான பிறழ்வுகள் தாக்கங்கள் அற்றவை. ஆனால் ஒரு சில பிறழ்வுகள் தான் முழு உலகிலும் பெரும் பாதிப்புக்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தின.
 
குறிப்பாக இத்தொற்று தோற்றம் பெற்ற முதல் வருடத்தில் ஏற்பட்ட பிறழ்வுகளாக விளங்கும் தென்னாபிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா, பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட அல்பா, பிரேசிலில் கண்டறியப்பட்ட கம்மா, இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
 
இப்பிறழ்வுகளின் விளைவாக உலகில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கானோர் காவு கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கொவிட் 19 தொற்றினால் 66 கோடியே 27 இலட்சத்துக்கும் (662,735,182) மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 67 இலட்சத்துக்கும் (6,706,305) மேற்பட்டோர் கடந்த 17 ஆம் திகதி (ஜனவரி 2023) வரை உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
 
தொற்று நோய்களின் அண்மைக் கால வரலாற்றில் குறுகிய காலப்பகுதியில் அதிகூடிய உயிரிழப்புக்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்திய தொற்று என்ற கரைபடிந்த தடத்தையும் கொவிட் 19 தொற்று பதித்து விட்டது.
 
என்றாலும் 2020 டிசம்பர் மாத முற்பகுதியில் இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசி அவசரப் பயன்பாட்டின் நிமித்தம் பாவனைக்கு வந்ததோடு அதன் பாதிப்புகளிலும் தாக்கங்களிலும் பலவீனங்கள் ஏற்பட ஆரம்பித்தன. இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னர் பி.1.1.529 என்ற ஒமிக்ரோன் பிறழ்வு 2021 நவம்பரில் பல நாடுகளில் கண்டறியப்பட்டன. அதன் தாக்கத்திற்கும் உலகின் பல நாடுகளும் எதிர்கொண்டன. ஆனால் ஏற்கனவே தாக்கம் செலுத்திய பிறழ்வுகளைப் போன்று இப்பிறழ்வு செல்வாக்கு செலுத்தவில்லை. ஆனாலும் அவை சில நாடுகளில் தாக்கம் செலுத்தியமையும் மறைக்க முடியாத உண்மையாகும்.
 
இருப்பினும் 2021 ஆம் ஆண்டின் முன்னரைப் பகுதி முதல் கொவிட் 19 தொற்றின் தாக்கமும் பாதிப்புகளும் வீழ்ச்சியடையத் தொடங்கியதோடு அதனைத் தவிர்த்துக்கொள்வதில் மக்கள் செலுத்தி வந்த கவனத்திலும் விழிப்புணர்விலும் பலவீனங்கள் ஏற்படலாயின. ஆனால் இத்தொற்று பிறழ்வுக்கு உள்ளாவதை நிறுத்திக்கொள்ளவில்லை. இதற்கு 2021 நவம்பரில் ஏற்பட்ட ஒமிக்ரோன் பிறழ்வு நல்ல சான்று.
 
இவ்வாறான பின்புலத்தில் கடந்த வருடத்தின் பின்னரைப் பகுதியில் கொவிட் 19 தொற்றின் தாக்கம் சீனாவில் மீண்டும் தலைதூக்கியது. அது நவம்பர் மாதமாகும்போது தீவிர நிலையை அடைந்தது. இது குறித்து உலகின் பல நாடுகளும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
 
அதேநேரம் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்படுள்ளது. இவ்வாறான சூழலில் அமெரிக்காவில் XBB.1.5 என்ற புதிய பிறழ்வுவொன்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இப்பிறழ்வு இற்றை வரையும் 38 க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியுள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கிறது.
 
இப்பிறழ்வானது ஏற்கனவே கண்டறியப்பட்ட பிறழ்வுகளைப் போன்றல்லாமல் வேகமாகப் பரவக்கூடிய பண்பைக் கொண்டிருப்பதாகக் தெரிவித்திருக்கும் உலக சுகாதார ஸ்தாபனம், இத்தொற்றை தவிர்த்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்குமாறும் மக்களைக் கேட்டுள்ளது.
 
இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் கொவிட் 19 தொற்று மீண்டும் தலைதூக்கும் அச்சுறுத்தல் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளன. குறிப்பாக சீனா, கொங்கொங், மக்கௌ உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சர்வதேசப் பயணிகள் பி.சி.ஆர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாடு மத்திய நிலையம் அறிவித்திருக்கின்றது.
 
இதேவேளை இந்தியாவும் சில நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளை கொவிட் 19 பரீட்சிப்புக்கு உட்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
 
இந்நிலையில் இலங்கையும் கொவிட் 19 தொற்றின் மீளத்தலைதூக்குவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. அதன் ஒரங்கமாக இந்நாட்டுக்கு வரும் உல்லாச பயணிகளுக்கு இத்தொற்று தவிர்ப்பு தொடர்பில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டல்களை அறிமுகப்படுவத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளன.
 
இவ்வாறான சூழலில் தான் இலங்கையின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத், இப்பிறழ்வு இலங்கைக்கும் வந்து சேர்வதற்கான வாய்ப்பு அதிகம்' என்றும் 'இதன் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆளுக்காள் தொற்றிப் பரவும் ஒரு தொற்றாக கொவிட் 19 தொற்று இருப்பதால் அதன் பரவுதல் தொடரைத் துண்டிக்க வேண்டும். அதன் நிமித்தம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவுதல், சனநெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்களை உச்சளவில் கடைபிடிக்க வேண்டும். அவை பரவுதல் தொடரைத் துண்டிப்பதில் அதிகூடிய பங்களிப்பை நல்கும். அத்தோடு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தத் தவறக்கூடாது.
 
ஆகவே கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்காத சூழலில் அதனைத் தவிர்த்துக் கொள்வதில் தொடர்ந்தும் விழிப்புணர்வோடு செயற்படுவது அவசியம். அதுவே ஆரோக்கியமானது. இத்தொற்று நோயைத் தவிர்த்துக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். அதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது இன்றியமையாததாகும்.
 
மழைக்காலநிலையுடன் சேர்த்து இலங்கையில் பெரிதும் தலைதூக்கக்கூடிய நோயாக டெங்கு வைரஸ் காய்ச்சல் விளங்குகிறது. இக்காய்ச்சலினால் வருடாவருடம் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். சிலர் உயிரிழக்கவும் செய்கின்றனர்.
 
அந்த வகையில் கடந்த வருடம் (2022) கூட இந்நோயினால் 65,933 பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் தவிர்ப்பு பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
 
ஆனால் டெங்கு நோயை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளவும் முடியும். இல்லாவிடில் இந்நோய்க்கு உள்ளாகி இருப்பதை ஆரம்பத்திலேயே இனம் கண்டு உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் நோயை முழுமையாகக் குணப்படுத்தியும் விடலாம்.
 
அதனால் மழை நீர் தேங்கி டெங்கு நுளம்பு பல்கிப் பெருகக்கூடிய கைவிடப்பட்ட சிரட்டைகள், உடைந்த மட்பாண்டங்கள், யோகட் கப்புகள், சிலிசிலி உறைகள் உள்ளிட்ட அனைத்தையும் அப்புறப்படுத்தி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது இவ்வின நுளம்புகள் பல்கிப் பெருக வாய்ப்பு இராது.
 
அதேநேரம் காய்ச்சல் ஏற்பட்டால் மூன்றாவது தினத்தில் அனைத்து நோயாளர்களுக்கும் பூரணமான குருதிப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமானது. அதனை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும். அதன் ஊடாக இந்நோயின் தீவிர நிலையைத் தவிர்த்தும் நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம்.
 
அதனால் இவ்வைரஸ் தொற்றுள்ள நுளம்பு இங்கு காவியாக செயற்படுகின்ற போதிலும் கட்டமைப்பு ரீதியாக இது மிகச் சமமான போதும் நோயைப் பரப்புவதில் வித்தியாசமான வைரஸ்கள் செயற்படுகின்றன. (DEN 1, DEN 2 , DEN 3, DEN 4)
 
இவ்வைரஸ் தொற்றுவதன் மூலம் ஏற்படும் நோய் நிலைமைகள் மிகப் பெரிய வீச்சில் விரிந்து செல்லலாம். என்றாலும் சில நபர்களிடம் அதற்கான எவ்வித அறிகுறிகள் வெளிப்படாது. சிலரிடம் நோயறிகுறிகள் தென்படும். இந்நோய் அறிகுறிகளைக் கொண்ட நபர்களுள் பெரும்பாலானவர்களிடம் சாதாரண வைரஸ் காய்ச்சல் நிலைமையை அவதானிக்கலாம். ஆனால் காய்ச்சல் அல்லது அசாதாரண நோய் அறிகுறிகளுடன் கூடிய டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை கூட ஏற்படலாம். இந்நோய் நிலை மிக அரிதாகவே தோற்றம் பெறும்.
 
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ள ஒருவருக்கு கடுமையான காய்ச்சல், கடும் தலைவலி, பின்புறக் கண்களில் வலி, மூட்டுக்களிலும் தசைகளிலும் வலி போன்றவாறான அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படலாம். சில நோயாளர்களுக்கு சிவப்பு நிறப் புள்ளிகள், கொப்புளங்கள் வெளிப்படும். சில வேளைகளில் முரசு, மூக்கு என்பவற்றின் ஊடாகவும் சளி மற்றும் தோல் ஊடாகவும் குருதிக்கசிவும் ஏற்படலாம்.
 
அதேநேரம் இருமல், தடிமன் மற்றும் தொண்டை வலி போன்ற மூச்சுக் குழலை அண்மித்த நோய் அறிகுறிகளுடன் கூடிய மலச்சிக்கல், வயிற்றோட்டம், வாந்தி, இடைக்கிடை ஏற்படும் வயிற்று வலி போன்ற உணவுக்குழாய் சார்ந்த நோய் அறிகுறிகளுடன் டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வரவும் கூடும்.
 
அதேநேரம் டெங்கு குருதிப்பெருக்கானது டெங்கு தொற்றின் உச்சக் கட்ட நோய் நிலையாகும். இந்நிலை மிகச் சிறியளவிலானோருக்கே ஏற்படும். இந்நிலைமையின் போது தெளிவான வித்தியாசங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளவரிடம் காய்ச்சல் குறைகின்ற வேளையில் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தவறக்கூடாது. தொடர்ச்சியாக வாந்தியெடுத்தல், வயிற்று வலி, கடுமையான தாகம், கடுமையான தூக்கம், மயக்க நிலைமை, உணவு மீதுள்ள வெறுப்பு, கைகால்களில் குருதியற்ற மற்றும் குளிரான தன்மை, அமைதியின்மை, குழப்ப நிலைமை, தோலின் நிறம் மாற்றமடைதல், சிறுநீர் வெளியேறாமை, குறைவாக சிறுநீர் வெளியேறல், நடத்தையில் மாற்றம், மயக்கம், இழிவான வார்த்தைப் பிரயோகம் போன்றவாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
குறிப்பாக கடுமையான காய்ச்சலுடன் கூடிய ஒரு நோயாளியின் முகம் மற்றும் கைகால்களில் சிவப்பு நிறத்தில் பரவிய தழும்களுடன் கூடிய தன்மையில் காணப்படல், வெண்குருதி சிறுதுணிக்கைகளின் அளவு குறைவடைதல், விசேடமாக காய்ச்சல் இன்றி, கைகால்கள் குளிராகவும், இதயத் துடிப்பு வேகமாகவும், நாடித் துடிப்பு மற்றும் குறைவான இரத்த அமுக்கத்துடன் காணப்படுமாயின் அது டெங்கு அதிர்ச்சி நிலையாகக் கூட இருக்கலாம். அது ஆபத்து மிக்க கட்டமாகும்.
 
அதன் காரணத்தினால் டெங்கு நோயைத் தவிர்த்துக்கொள்வதில் அல்லது ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்திக் கொள்வதில் ஒவ்வொருவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக இந்நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம். அப்போது இந்நோயின் சிக்கலானதும் குணப்படுத்த முடியாததுமான நிலைமையைப் பெரிதும் தவிர்த்து ஆரோக்கயத்தைப் பேணிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
 
மர்லின் மரிக்கார்

Add new comment

Or log in with...