என்னை விமர்சிக்க எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது

சரத் பொன்சேக்காவுக்கு மைத்திரிபால பதில்

இராணுவ தலைமையகத்தை பாதுகாத்துக்கொள்ள முடியாத சரத் பொன்சேகாவுக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் என்னை விமர்சிக்க எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும் என சரத் பொன்சேகா எம். பி தெரிவித்த கூற்றுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அது தொடர்பில் மேலும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி:

புறக்கோட்டை வியாபாரிகள் நிதியுதவி வழங்கினால் அதனை பெற்றுக்கொள்வேன் ஏனெனில் என்னிடம் நிதியில்லை. உடலையும், கண்ணையும் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை சிறைப்படுத்துமாறு குறிப்பிடுகிறார்கள் என்றார்.

என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முன்னர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலில் தெளிவாக பார்க்க வேண்டும். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் எனக்கு தெரிவிக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.10 கோடி ரூபா நட்டஈடே தவிர தண்டப்பணம் அல்ல என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.

சரத் பொன்சேகா சிறையில் இருந்த போது நான் தான் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினேன். இவ்வாறான பின்னணியின் என்மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நியாயமற்றது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் என்னை சிறைப்படுத்த வேண்டும் என சரத் பொன்சேகா உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆகியோர் தெரிவித்து வந்துள்ளனர்.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது இராணுவ தலைமையகத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவ்வாறாயின் அவர் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...