- 10 புகையிரத சேவைகள் இரத்து; பெரும்பாலான சேவைகள் தாமதம்
- புகையிரத நேர அட்டவணையில் மாற்றமில்லை
- பெப்ரவரி ஆரம்பத்தில் புதிய புகையிரத நேர அட்டவணை
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இன்று (12) முதல் தினமும் 42 புகையிரத சேவைகளை இரத்து செய்யும் முடிவு கைவிடப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய புகையிரத அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லையென, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் 10 புகையிரத சேவைகள் இன்றையதினம் (12) இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெரும்பாலான புகையிரதங்கள் தாமதமாகவே வருகை தருவதாகவும், இதனால் தாம் பாரிய அசௌகரியங்களுக்குள்ளாவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் புகையிரத ஊழியர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஊழியர் பற்றாக்குறை காரணமாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிரமம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஊடகங்கள் அறிக்கையிட்டது போன்று பணியாளர்கள் ஓய்வுபெற்றமை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் (கலாநிதி) பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (05) அவருடைய தலைமையில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவதால் எரிபொருள் விநியோகத்துக்காக அதிகளவான ரயில்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் ரயில் போக்குவரத்தை குறிப்பிட்டளவு குறைக்க வேண்டி ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். அத்துடன், ஊடகங்கள் அறிக்கையிடுவதைப் போன்று ரயில் போக்குவரத்து இரத்துச் செய்யப்படவில்லையென்றும் இது தொடர்பில் விளக்கமளிக்க இருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பெப்ரவரி மாத தொடக்கத்தில் கிடைக்கக்கூடிய திறனுக்கு ஏற்ப புதிய புகையிரத நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த ஊழியர்களின் சேவை தேவையாயின் அத்தியவாசியமான ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி செயலகம் புகையிரத திணைக்களத்திற்கு அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
60 வயதாகும் அரச ஊழியர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு வழங்குகின்ற, 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய, டிசம்பர் 31ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள அரச நிறுவனங்களிலிருந்து சுமார் 30,000 பேர் ஓய்வு பெற்றுள்ளதாக, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment