- கட்சியிடம் அறிவித்ததாக, ஐ.தே.க. தெரிவிப்பு
- "நாட்டை மீளக் கட்டியெழுப்பவே ஆணை வழங்கப்பட்டுள்ளது" ஜனாதிபதி
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் தாம் பங்கேற்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்றையதினம் (04) உத்தியோகபூர்வமாக கட்சியிடம் அறிவித்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்குள் நாட்டை வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, தேர்தலை நடாத்த அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
அந்த ஆணைக்கு புறம்பாக செயற்பட தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் நேற்று மாலை கொழும்பில் வைத்து சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட வேண்டுமாயின், அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் செயற்குழுக் கூட்டத்தின் தலைமைப் பதவியை மரபு ரீதியாக மாத்திரமே ஏற்பேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு தேர்தல் பணிகளிலும் தான் பங்கேற்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்குமானால், 40% ஆன புதிய முகங்களை வேட்பாளர் பட்டியலில் இணைப்பது பொருத்தமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமனம் செய்யப்படும் 4,000 உறுப்பினர்களுக்கு மாத்திரமே சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, ஏனையோர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இன்றி இலவசமாக பணியாற்றுவார்களா என்பதை தெரிவிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Add new comment