வவுனியாவில் 9,486 விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு உதவித் தொகை வைப்பீடு

ஒரு ஹெக்டயருக்கு உட்பட்ட நிலத்தில் விவசாயம் செய்யும் 9486 விவசாயிகளுக்கு உதவித் தொகை வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்கள வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர் நே. விஷ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பில் இன்று (03) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா  மாவட்டத்தில் 2022/23 பெரும்போகத்தில் 21,864 விவசாயிகள் பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். 23 ஆயிரத்து 369 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக விவசாயிகளுக்கான உதவித் தொகையாக தலா ஒரு ஹெக்டயருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம்  வழங்கப்பட இருக்கின்றது. இதன்படி 9,486 விவசாயிகளுக்கு இந்த உதவித் தொகை திங்கட்கிழமை முதல் வங்கியில் வைப்பு செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக  ஒரு ஹெக்டயருக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளதோடு, இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அவை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் ரூ. 10,000 - 20,000 ரூபா வரை பண உதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இக்கொடுப்பனவு மீள அறவிடப்படமாட்டாது என்பதுடன் முற்றிலும் நன்கொடையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா விசேட நிருபர்


Add new comment

Or log in with...