நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்: வளர்ச்சியை அளவிடும் சக்தி வாய்ந்த ஆயுதம்

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் வளர்ச்சியை அளவீடு செய்வதற்கான மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்  என்று ஜம்மு காஷ்மீரின் பிரதம செயலாளர் அருண் குமார் மெஹ்தா தெரிவித்துள்ளார்.

'ஜம்மு காஷ்மீருக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்' என்ற தொனிப்பொருளில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கத்தின் திட்டமிடல் மேம்பாடு மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் அபிவிருத்தியை அளவீடு செய்யா விட்டால் எம்மால் முன்னேற்றமடைய முடியாது.  அதனால் நிலைபேறு தன்மையுடன் வளர்ச்சியை அளவீடு செய்ய வேண்டும். இல்லாவிடில் அவ்வளர்ச்சி வெறும் நிகழ்வாக இருக்கும். பொதுவாகவும் குறிப்பாக நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் வளர்ச்சியை அளவீடு செய்வதற்கான மிகவும் வலுவான ஆயுதமாகத் திகழுகிறது. அதனால் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் பொறிமுறையை 2030 வரையான திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு அனைத்து திணைக்களங்களுக்கும் அவர் அறிவுரை வழங்கினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பல்வேறு வேலைத்திட்டங்களையும் செயற்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. பல திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அபிவிருத்தியில் ஜம்மு காஷ்மீர் முன்னணியில் காணப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இச்செயலமர்வில் திட்டமிடல் மேம்பாடு மற்றும் கண்காணிப்பு திணைக்களச் செயலாளர் உரையாற்றுகையில், 'கடந்த இரண்டு வருடங்களில் சுகாதாரம், விவசாய உற்பத்தி, கல்வி, புதுப்பிக்கத்தக்க சக்தி, வனவளப் பரப்பை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் போன்ற பல துறைகளிலும் ஜம்மு காஷ்மீர் முன்னணி யூனியன் பிரதேசமாக விளங்குகிறது' என்றுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சகல திணைக்களங்களதும் சிரேஷ்ட அதிகாரிகளும் இச்செயலமர்வில் பங்குபற்றியுள்ளனர்.


Add new comment

Or log in with...