கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் எழுதிய 'KUDIL and the HEADMASTER' என்ற நூல்

'அக்கரைச் சீமை' எனக் கூறப்படும் பெரிய பிரித்தானியா போன்ற பல்லினப் பண்பாடுகளை Multi Cultural ஐ அங்கீகரித்து ஆதரவளித்து அவற்றின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் மேற்குலக நாடுகளில் தமிழரின் பரம்பலும் அவர்களின் தாய்மொழியான தமிழ், சைவம் மற்றும் அவை சார்ந்த பண்பாடும் அண்மைக் காலங்களில் மிகத்துரிதமாக வளர்ந்து வருகின்றன.

வருங்கால சந்ததியினர் தம் தாய்மொழி, கலைகள் ஆகியவற்றின் அதிசிறப்புக்களைக் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பெருநோக்குடன் அவற்றை வளர்ப்பதற்கும் பேணுவதற்குமான செயற்பாடுகளைத் திட்டமிட்டு மிக முனைப்புடன் மேற்கொண்டனர். அவ்வாறான சிறப்பிற்குரிய முன்னோடிகளில் ஒருவரும் யாழ்ப்பாணம் சித்தன்கேணியைச் சேர்ந்தவரும் பேராதனைப் பல்கiலைக்கழகத்தில் இரசாயனவியல் விரிவுரையாளராகக் கடமையாற்றியவரும், அறுபதுகளில் புலமைப்பரிசில் பெற்றுப் பெரியபிரித்தானியப் பல்கலைக்கழகமொன்றில் இரசாயனத் துறையில் கலாநிதியாக உயர்தகைமை பெற்றவரும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய இராச்சியத்தில் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டு சமூகநலனோம்பு சேவைகள் பல மேற்கொண்டு வருபவருமான இரத்தினம் நித்தியானந்தன் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவராவார். 'DR. நித்தி' என லண்டன்வாழ் தமிழ் மக்களால் நன்கறியப்பட்டவரான கலாநிதி நித்தியானந்தன் தனிமனிதனாக ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமொன்றிற்கு இணையாக -நிகராக மேற்கொண்டு வரும் சமூக நலத் தொண்டுகளால் பயனடைபவர்கள் இங்கு மாத்திரமன்றி தாய்நாட்டிலும் மிகப்பலர்.

தனது தொழில், குடும்ப வாழ்க்கை என்ற தன் சொந்தப் பொறுப்புகளுக்கு மேலாகத் தனது நேரத்தின் கணிசமான பகுதியினை ஒதுக்கித் தான்சார்ந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் Ratnam Foundation என்ற தர்ம அமைப்பின் --Charity Organization-- ஊடாக அவர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பணிகள் கனதியானவை -காத்திரமானவை. - வாய்ப்பு வசதிகளில் மிகமிக பின்தங்கிய தாய்நாட்டுச் சிறார்களை இனங்கண்டு அவர்களின் கல்வித்தரத்தை நவீன கணனியுகத்திற்கேற்ப உயர்த்துவதே மிகச்சிறப்பானது மட்டுமன்றிக் காலத்தின் கட்டாயமாகுமென அடிக்கடி அவர் கூறுகின்றார்.

கல்விதான் ஒருவரை வாழ்க்கையில் மிக உயர் நிலைக்குக் கொண்டு செல்லும்,ஆகையால் ஒருவருக்கு நாம் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய கொடை கல்வியே' என்று அவர் குறிப்பிடுகின்றார். 'லண்டணில் பல்கலைக்கழகப் பட்டக்கல்விக்கு நிகராகப் போதிக்கப்படும் ஒரு கல்வி நிறுவனமாக லண்டன் தமிழ் நிலையத்தை உருவாக்குவதே தனது பெருவிருப்பம்' என்று அவர் தெரிவித்தார்.

நித்தியின் தமிழ்க் கல்விப் போதனையினை லண்டனிலுள்ள ஏனைய தமிழ்ப் பாடசாலைகளும் முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்மொழியை உயர்தரத்தில் கற்பிக்க முயன்றால் அவர்கள் கல்விகற்கும் முதல் மொழிக்கு மேலதிகமாகக் கற்க விரும்பும் ஒரு மொழியாகத் தமிழ்மொழியினையும் போதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்த முடியும்.

இந்த வகையில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ள 'குடில் தோற்றுவித்த தலைமையாசிரியர்' (Kudil and the Head Master) என்ற இந்த நூல் போட்டி நிறைந்த சூழலும் வாய்ப்பு வசதிகளும் மிக்க இன்றைய கல்வி உலகிற்கு வழிகாட்டக்கூடிய பயன்படக்கூடிய வகையில் சாதனையாளர் ஒருவரால் இரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்ட சிறந்த சுயசரிதை நூலென இந்நூலை விதந்து குறிப்பிடலாம்.

மு.க. மாசிலாமணி


Add new comment

Or log in with...