பேராசிரியர் கைலாசபதியும் மகாகவி பாரதி ஆய்வுகளும்

பேராசிரியர் கைலாசபதி (1933-1982) அவர்களின் நாற்பதாவது நினைவு தினம் மார்கழி மாதம் 6ஆம் திகதி ஆகும். 49 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த பேராசிரியர் கைலாசபதி அவர்களையும் அவரது பன்முகப்பட்ட பங்களிப்புக்களையும், அவரது ஆளுமைகளையும், நினைவுகளையும் தொடர்ந்து அவரது சமகாலத்தவர்கள், நண்பர்கள், மாணவர்கள், அவரது எழுத்திலும் கருத்திலும் ஈர்ப்புடையவர்கள் என்று பலரும் எழுதிக்கொண்டே இருக்கின்றனர்.

காலவோட்டத்தில் அவரது ஆளுமையினையும் குறுகிய வாழ்நாளில் அவர் ஆற்றிய பங்களிப்பினையும் பற்றிய புதிய மதிப்பீடுகளும் புதிய பொருள் கோடல்களும், புதிய அகலித்துப் பரந்த ஆய்வுகளும் என்று, மட்டுமல்லாது அவர் விட்டுச் சென்ற ஆய்வுத் தளங்களையும் புகட்டிய ஆலோசனைகளயும் கூட இன்றைய அறிவுப் புரட்சி, ஆவணத் தகவல் தொழில்நுட்ப வசதி போன்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டும், நவீன மெய்யியற் கோட்பாட்டுகள், அணுகுமுறைகளைக் கொண்டும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவைகள் இன்னமும் இருந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று பாரதி இயல் என்பதுவும்.

பன்முகப்பட்ட ஆய்வுத்தளங்களில் செயற்பட்ட பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பாரதி பற்றிய ஆய்வுகள் அன்று நவீனமானவையாக, அபாரமானவையாக, முற்போக்கானவையாக, முன்னோடியானவையாக அமைந்திருந்ததை அறிவுலகம் பாராட்டி நிற்கின்றது.

பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பாரதி பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில், பலவேறு வடிவங்களில் எழுதிய இருபத்தியிரண்டு கட்டுரைகள் அடங்கிய 'பாரதி ஆய்வுகள்' என்ற நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக 1984இல் வெளியாகியிருக்கின்றது. பாரதியியல் பற்றி சுமார் முப்பது கட்டுரைகளை பேராசிரியர் கைலாசபதி எழுதியிருகின்றார் என்று கூறுகின்றார் பேராசிரியர் செ. யோகராசா.

ஆய்வியலுக்கும், குறிப்பாக ஒப்பியல் ஆய்வுக்கும் பாரதியியலுக்கும் பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பினைத் தெரிந்துகொள்வதற்கு மிக முக்கிய நூலாக 'பாரதி ஆய்வுகள்' என்ற இந்த நூல் இருக்கின்றது. இந்த நூலினைத் தொகுத்தளித்த கைலாசபதி அவர்களின் ஆய்வுதடத்தினையொற்றிச் செல்பவர்களான பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மற்றும் கைலாசபதி அவர்களின் மனைவி சர்வமங்களம் போன்றோருக்கு ஆய்வுலகம் நன்றி கூறக் கடைமைப்பட்டுள்ளது. இந்த நூலைவிட ’On Bharathi’ என்ற பாரதி பற்றி பேராசிரியர் கைலாசபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய இரண்டு கட்டுரைகள் அடங்கிய நூலொன்றினையும் மேற்படி பதிப்பகம் 1987 இல் வெளியிட்டிருக்கின்றது.

'பாரதி ஆய்வுகள்' என்ற மேற்சொன்ன நூலினை முன்வைத்து ’பாரதியியலுக்கு கைலாசபதியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் பேராசிரியர் செ. யோகராசா விஸ்தாரமான ஆய்வுக்கட்டுரை ஒன்றினை எழுதியிருகின்றார்.

’கைலாசபதி நினைவுகள்’ என்ற நூலில் செ.கணேசலிங்கன் அவர்கள் ”கைலாசபதிக்கு பாரதிமேல் ஒரு பக்தி, வெறி என்று கூடச் சொல்லலாம்; தாகூருடன் ஒப்பிடும்போதும் பாரதியை உயர்வாகவே கொண்டார்' என்று கூறுகின்றார்.

‘பாரதி ஆய்வுகள்’ என்ற இந்த நூலில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும் போது, பாரதியின் வாழ்வும் வரலாறும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் வாழ்வுடனும் வரலாற்றுடனும் சிலவேளைகளின் ஒன்றித்துவிடுவதான ஒரு யோசனை வந்துகொண்டேயிருந்து. இவ்வாறானதொரு உணர்வினை செ.கணேசலிங்கன் அவர்களும் குறித்துச் செல்கிறார்.

பாரதியின் மீது கைலாஸ் அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டினை இந்த ஆய்வுகளுக்கு அப்பாலும் எடுத்துக்காட்டப் பல சம்பவங்கள் அறியக்கிடக்கின்றன. விபுலாநந்த அடிகள் அவர்கள் பாரதி வாழுங் காலத்திலேயே அவரது கவித்திறனை இனங்கண்டு எழுதிய முதலாமவர் என்று கூடச் சொல்லாம். அந்த விபுலாநந்த அடிகள் பற்றிக் கைலாஸ் அவர்கள் எழுதிய கட்டுரைகளிலும் அவைபோன்ற இன்னும் பல கட்டுரைகளிலும் பாரதியின் அழகிய வரிகள் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும்.

பண்டிதர் எஃவ். எக்ஸ்.சி. நடராசா அவர்கள் இவரது சம காலத்தவர். கைலாசபதியின் சமூக இலக்கியக் கொள்கையின் மறு துருவம் அவர். இருவரும் மேடையொன்றில் விவாதிக்கின்றனர்.

பாரதியியல் என்கிற ஆய்வுத்துறைக்குப் பாரதியின் முறையான வரலாறு எழுதப்பட வேண்டும் என்றும், பாரதியின் ஆக்கங்களுக்கு பாடபேதங்களையெல்லாம் ஆய்ந்த ஒர் சிறந்த ஆய்வுப் பதிப்பு வேண்டும் என்பதும், அத்தோடு பாரதி பற்றிய நூற்றொகை ஒன்றின் தேவையினையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார் கைலாசபதி அவர்கள்.

பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் ஆக்கங்கள் பற்றிய ஒரு விவரணப் பட்டியலை லண்டன் வாழ் நூலகர் என்.செல்வராசா தயாரித்து வழங்கியுள்ளதையும் கண்ணுறுகின்றோம். இது போன்ற செயற்பாடுகளில் இன்னும் அதிக கவனங்கள் குவிக்கப்படவேண்டும்.

நடராசா சுசீந்திரன்...?


Add new comment

Or log in with...